காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றவந்த நிலையில், இன்று (டிசம்பர் 14) காலை 10.12 மணியளவில் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரியாரின் பேரன் ஆவார். இவருடைய மகன் திருமகன் ஈவெரா ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவிவகித்தார். இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்தார்.
இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில், கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்கு பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66,234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் மீண்டும் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கட்சி பணிகளிலும், தொகுதி பணிகளிலும் ஈடுபட்டிருந்த இளங்கோவனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இரவு சென்னையில் மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மூச்சுத்திணறல் பாதிப்பால் அவதிப்பட்ட இளங்கோவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. இருப்பினும், உடல்நிலையில் எந்த முன்னேறமும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 13) இரவு முதல் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
எவ்வளவு போராடியும் சிகிச்சை பலனின்றி இன்று காலமாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், பின்னர் அவரது சொந்த ஊரான ஈரோட்டிற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.