Tue. Jul 1st, 2025

பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்க்கு கொட்டு வைத்த நீதிமன்றம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்க்கு நீதிமன்றம் கொட்டு வைத்து உள்ளது.

அதாவது, சென்னையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில், FIR வெளியான விவகாரத்தில், சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களிடம் சட்ட விதிகளுக்கு புறம்பாக சம்மன் அனுப்பியது மற்றும் சட்ட விதிமுறைகளை மீறி அவர்களது செல்போன்களையும் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழு போலீசாரை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இது, போலீசாருக்கும் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தான், பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்க்கு நீதிமன்றம் கொட்டு வைத்தது.

இது குறித்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் ம.சுரேஷ் வேதநாயகம் மற்றும் பொதுச் செயலாளர் மு.அசீப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அண்ணா பல்கலைகலைக்கழக அரசியல் சாசனத்தின் வெளிச்சத்தில் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் வழங்கப்பட்ட தீர்ப்பு” என்றும், “சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை சென்னை பத்திரிகையாளர் மன்றம் மகிழ்வுடன் வரவேற்கிறது” என்று தலைப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ள உள்ளனர்.

அந்த அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்து விசாரிப்பதற்காக பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை சிறப்பு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியது. விசாரணைக்குச் சென்ற பத்திரிகையாளர்களை குற்றவாளிகளைப் போல் நடத்திய சிறப்பு விசாரணைக்குழு அவர்களின் செல்போன்களையும் சட்டத்திற்குப் புறம்பாக பறிமுதல் செய்தது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு நீதிபெற்று தரும் நோக்கில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை 04.02.2025 அன்று, விசாரித்த மாண்புமிகு நீதிபதி இளந்திரையன் அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவில், எஃப்ஐஆர்-ஐ பதிவேற்றம் செய்ததில் பத்திரிகையாளர்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று தெளிவாக குறிபிடப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக் குழு பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட கேள்விப் பட்டியலை (questionnaire) பார்க்கும்போது, பெரும்பாலான கேள்விகள் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பற்றியவையே என்று கூறியுள்ள நீதிபதி, இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனியுரிமை உரிமைக்கு (Right to Privacy) புறம்பானது என்றும் கூறியுள்ளார்.

K.S. Puttaswamy (Retd) Vs. Union of India வழக்கின் அடிப்படையில், தனியுரிமை என்பது அரசின் தன்னிச்சையான கண்காணிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் ஒரு அடிப்படை உரிமை என்பதை தெளிவுபடுத்தியுள்ள நீதிபதி, இவ்வுரிமை, நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத்துறையினருக்கும் சரியாக பொருந்தும் என்று கூறியுள்ளார்.

மேலும், Manohar Lal Sharma Vs. Union of India வழக்கில், தனியுரிமையின் மீதான எந்தவொரு சட்டப்பூர்வ தலையீடும், அதன் நோக்கத்திற்கேற்ப தேவையான அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி இளந்திரையன், விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வது, அவர்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்க கட்டாயப்படுத்துவது அவர்களின் ரகசிய தகவல்களை வெளிப்படுத்துமாறு கேட்பது, ஊடகத்துறையின் மீது அழுத்தம் கொடுத்து, அவர்களை மிரட்டும் செயல் என்றும் கூறியுள்ளார்.

ஊடக நிறுவனங்கள் பெறும் தகவல்களும், அவற்றின் ஆதாரங்களும் Press Council Act (Sec 15(2))-படி பாதுகாக்கப்பட்ட தகவல்களாக (Privileged Communication) கருதப்படும் என்று கூறியுள்ள நீதிபதி, ஆதாரங்களை கண்டுபிடிக்க செல்போன்களை பறிமுதல் செய்வது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர்கள் தங்கள் செல்போன்களில் எந்த குற்றச்சான்றுகளும்

இல்லை என்பதையும், முதல் தகவல் அறிக்கையை பதிவேற்றம் செய்யவோ, பகிரவோ இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, இந்த சூழலில், அர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தது, Press Council Act (Sec 15(2))-இன் படி சட்டத்திற்குப் புறம்பானது என்றும் கூறியுள்ளார்.

மேலும், முதல் தகவல் அறிக்கையை யார் எழுதியது, அது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எப்படிப் பதிவேற்றம் செய்யப்பட்டது என்பதை சிறப்பு விசாரணைக் குழு விசாரணை செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி இளந்திரையன், பத்திரிகையாளர்களை மட்டுமே அவர்கள் விசாரணைக்கு அழைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

முதல் தகவல் அறிக்கையை பதிவேற்றம் செய்தவர்களையும், அதற்கான அதிகாரத்தைக் கொண்டவர்களையும் விசாரணை செய்யாமல்,

பத்திரிகையாளர்களிடம் மட்டுமே விசாரணை நடத்துவது தவறான நோக்கம் கொண்டது என்றும் விமர்சித்துள்ளார்.

எனவே, விசாரணை அதிகாரிகள், பத்திரிகையாளர்களை விசாரணைக்கு

அழைக்கலாம், ஆனால் அவர்கள் மீது எந்தவிதத்திலும் அழுத்தங்கள கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ள நீதிபதி இளந்திரையன் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களை திருப்பிக் கொடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர்களின் தனியுரிமையையும், கருத்துச் சுதந்திரத்தையும், தகவல் அளிப்பவர்களின் ரகசியத்தையும் பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அவர்கள் பிறப்பித்துள்ள இந்த உத்தரவை சென்னை பத்திரிகையாளர் மன்றம் மகிழ்வுடன் வரவேற்கிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தின் வெளிச்சத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு பத்திரிகையாளர்களின் உரிமையை இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் பாதுகாப்பதற்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் உறுதியாக நம்புகிறது.

இந்த விவகாரத்தில், பத்திரிகைச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக களம் கண்ட மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது” என்றும், தெரிவித்து உள்ளனர்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *