பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், அவரது யூ டியூப் சேனலை மூட அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
“காவல் துறை அதிகாரிகளையும் பெண் போலீசாரையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் அப்போது அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி தமிழ்ச் செல்வி முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேகநாதன், “சர்ச்சைக்குரிய வகையில் இனி பேச மாட்டேன் என்றும், இதே போன்ற வழக்கில் ஏற்கனவே ஃபெலிக்ஸ் ஜெரால்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், ஆனால் அதனை மீறி தொடர்ந்து இப்படி அவர் பேசி வருவதாகவும்” குற்றம்சாட்டினார்.
அப்போது, ஃபெலிக்ஸ் ஜெரால்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “தனது பேச்சுக்கான விளைவு தற்போது தான் உணர்ந்து உள்ளதாகவும், இனி ஒரு போதும் இவ்வாறு பேச மாட்டேன்” என்றும், உறுதி அளித்தார்.
இதனையடுத்து, ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, “அவரது யூ டியூப் சேனலை மூட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய வகையில் இனி நேர்காணல் அளிக்க மாட்டேன் என விசாரணை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும்” நீதிபதி நிபந்தனை விதத்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.