“தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையில் முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாக” வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய சிதம்பரம் உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், “பழைய கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் கிராமங்களுக்குள் அடிக்கடி முதலைகள் புகுந்து கால் நடைகளை கொன்று தின்று விடுவதை தடுக்கும் வகையில், முதலைப் பண்ணை அமைக்க வேண்டும் ” என்று, கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, “உறுப்பினர் கோரிய இடத்திற்கு அருகாமையில் உள்ள அணைக்கரையில் முதலைகள் பாதுகாப்பு அமையம் அமைக்கும் பணிகள் தொடங்கி இயிருப்பதாக” கூறினார்.
தொடர்ந்து பேசிய கீழ் பெண்ணாத்தூர் உறுப்பினர் பிச்சாண்டி, “சாத்தனூர் அணையில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்து, முதலைகள் கரைக்கு வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும், அவர் கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் சாத்தனூர் உட்பட மூன்று இடங்களில் முதலைப் பண்ணைகள் இருப்பதாகவும், விலங்குகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவற்றால் மனிதர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என முதலமைச்சர் தங்களுக்கு அறிவுறுத்தி இயிருப்பதாகவும்” அவர் கூறினார்.
குறிப்பாக, “காட்டு விலங்குகள் ஊருக்குள் புகாத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், சாத்தனூர் முதலைப் பண்ணையில் இருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அதே போல், “செங்கம் நகராட்சிக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்க மத்திய அரசின் நிதி கோரப்பட்டு உள்ளதாக” அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, “செங்கம் நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை இணைத்து புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது என்றும், இதற்கு புதிய கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்க மத்திய அரசின் நிதி கோரப்பட்டு உள்ளது” என்றும், தெரிவித்தார்.
மேலும், “புதிய கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கும் போது செங்கம் நகராட்சியும் இந்த திட்டத்தில் பலனடையும் என்றும், திருவண்ணாமலை நகரத்திற்கு குடிநீர் குழாய் பழுதடைந்தது என்றும், அதன் படி தற்போது குழாய்கள் சரி செய்யப்பட்டு வருகிறது” என்றும், அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.