நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுப்படுத்தும் விதமாக அமித்ஷா பேசியது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டிசம்.19 நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் பேரணி செல்ல திட்டமிட்டனர்.
ஆனால், அதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி, நாடாளுமன்ற நுழைவு வாயில் முன்பு பாஜக எம்பிக்கள் போராட்டம் செய்தனர். பின்னர், அதுவே இரண்டு கட்சிகளுக்கும் இடையே கைகலப்பாக மாறியது. இதில், பாஜக எம்.பி. பிர்தாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது, ராகுல் காந்தி ஒரு எம்பி-யை தள்ளிவிட்டதால், அந்த எம்பி தன் மீது விழுந்து தனக்கு மண்டை உடைந்துவிட்டதாக சாரங்கி குற்றம் சாட்டினார். மேலும், அவைக்குச் சென்ற தன்னை தடுத்து நிறுத்தி மிரட்டியதாகவும் பாஜகவினர் மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், பாஜக எம்பிக்கள் அனுராக் தாக்கூர், ஹேமங் ஜோஷி, பன்சூரி ஸ்வராஜ் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்களுடன் ராகுல் காந்தி மோதலில் ஈடுபட்டதாகக் கூறி டெல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.