Mon. Jun 30th, 2025

தர்மேந்திர பிரதான் Vs அன்பில் மகேஷ்: தர்மேந்திர பிரதான்க்கு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!

“மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலுக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலடி கொடுத்து உள்ளார்”.

தர்மேந்திர பிரதான் Vs அன்பில் மகேஷ்:

மத்திய அமைச்சருக்கு பதிலடி தரும் வகையில் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “புதிய கல்விக் கொள்கை தமிழ் நாட்டினுடைய வெற்றிகரமான கல்வி முறையை குறைக்கும் நோக்கில் இருப்பதால், அதனை தமிழகம் எதிர்க்கிறது” என்று, பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிய கடிதத்தில் உள்ள நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அந்த கடிதம் புதிய கல்விக் கொள்கையை அங்கீகரிக்க தமிழகம் தயார் என்பதாக குறிப்பிடவில்லை” என்றும், அதிரடியாக பேசினார்.

அத்துடன், “தமிழ்நாடு மத்திய அரசு செயல்படுத்துகின்ற திட்டங்களில் மாணவர் நலனுக்காக மட்டுமே இணைந்து செயல்படுகிறது என்றும், அதற்காக புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் இல்லை” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்தார்.

மேலும், “ஏற்கனவே அந்த கடிதத்தில் தமிழக அரசு அமைத்த குழு அளிக்கின்ற பரிந்துரையின் அடிப்படையிலேயே பி எம் ஸ்ரீ திட்டத்தில் இணைவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று, தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாகவும்” அமைச்சர் அன்பில் மகேஷ் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

முக்கியமாக, “அரசியல் செய்வதாக மத்தியஅமைச்சர் கருதினார் என்றால், அது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி தமிழக கலாச்சாரம் மற்றும் பெருமையை சிதைக்க நினைப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும்’ என்றும், மத்திய அரசை தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அதே போல், “தமிழக கல்வி முறை எடுத்துக்காட்டாகவும், தொடர்ந்து மாணவர்களுடைய எதிர்காலத்தை திறனை மேம்படுத்துவதாக அமைந்து உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, “உங்களிடமிருந்து ஒன்றை மட்டுமே எதிர்பார்க்கின்றோம்” என்று குறிப்பிட்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “இந்தியாவினுடைய பன்முகத்தன்மையை புரிந்து கொள்வது பலம். அது, பலவீனம் அல்ல என்பதை புரிந்து கொண்டு, தமிழக அரசின் மாணவர்கள் எதிர்கால நலன் சார்ந்த நிலைப்பாட்டை அங்கீகரித்து ஆதரிப்பதே தமிழ்நாட்டிற்கும் மாணவர்களுக்கும் செய்யும் நன்மையாக இருக்க முடியும்” என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலுக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலடி கொடுத்து உள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *