Sun. Dec 22nd, 2024

காதல் திருமணம் முடித்த கையோடு ஜோடியாக திருட்டு பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளை!

காதல் திருமணம் முடித்த கையோடு, மனைவியுடன் திருட்டு பைக்கில் சென்ற இளைஞரை போலீசார் மடக்கிப் பிடித்ததால், மனைவி கடும் அதிர்ச்சியடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தான் இப்படி ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

வேடசந்தூர் அருகே உள்ள வட மதுரை ஓம் சக்தி கோவில் நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான வசந்த், உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த சூழலில், அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், அது காதலாக மாறி இருக்கிறது. ஆனால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறி வட மதுரையில் உள்ள விநாயகர் கோயிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு, பாதுகாப்பு கேட்டு வட மதுரை காவல் நிலையத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். வட மதுரை மாரியம்மன் கோயில் வளைவு அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது, அவர்களின் பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளை வழி மறித்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், புதுமாப்பிள்ளை வசந்த்தை பிடித்து காரில் ஏற்றி வட மதுரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். ஆனால், காரில் வந்தவர்கள் காவல் துறையினர் என்பது தெரியாமல், மணமகளின் உறவினர் என்று நினைத்து மணமகனின் நண்பர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் தாங்கள் போலீசார் என்றும், வேறு ஒரு வழக்கிற்காக வசந்த்தை கைது செய்வதாகவும் கூறி கல்லூரி மாணவியையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிச் சென்று வட மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அங்கு குவிந்த நிலையில், சினிமா பாணியில் நடந்த காட்சிகளைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, பொதுமக்களுக்கு, என்ன நடக்கிறது? என்று தெரியாமல், குழப்பத்துடன் நின்றனர்.

அதனைத் தொடர்ந்து, விருதுநகர் குற்றப் பிரிவு போலீசார் விசாரித்தபோது “வசந்த் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விருதுநகர் பகுதியில் உள்ள ஒரு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதாகவும், அவர் வட மதுரையில் இருப்பது தெரிந்து அவரை பிடிப்பதற்காக சாதாரண உடையில் வந்ததும் தெரிய வந்தது.

ஆனால், போலீசார் தன்னை பிடிக்க வருவார்கள் என்று அறியாத வசந்த் இன்று திருமணம் செய்து கொண்டு, காதல் மனைவியுடன் திருடிய மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று உள்ளார். அதனைத்தொடர்ந்து, போலீசார் வசந்தை கைது செய்து விருதுநகர் அழைத்துச் சென்றனர்.

மேலும், அவர் திருடிய பைக்கையும் பறிமுதல் செய்துக்கொண்டனர். அதன்பிறகு, வட மதுரை மகளிர் போலீசார் மாணவியின் பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் அந்த கல்லூரி மாணவியை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *