Mon. Dec 23rd, 2024

வரதட்சணை தர மறுத்த தனது மாமனாரை தாக்கி கழுத்தை அறுத்த கணவன் மீது அவரது மனைவி “காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பாப்பினை கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர், அங்குள்ள சிவன் மலை கோயில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் நிவேதாவை, பிரபாகரன் என்பவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்து உள்ளார்.

இந்த தம்பதிக்கு 12 வயதில் மகன் உள்ள நிலையில், பிரபாகரன் சமீப காலமாக மனைவியின் சொத்துக்களை தனது பெயரில் எழுதி தரச் சொல்லியும், தனது மனைவியின் சொத்துக்களை விற்று வரதட்சனை தர வேண்டும் என்றும் அடிக்கடி மது போதையில் வந்து மனைவி நிவேதாவை தொடர்ந்து தாக்கி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், கடந்த மாதம் 100-க்கு போன் செய்து நிவேதா, தன் கணவன் மீது புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், தனது தந்தை வேலுச்சாமி வீட்டில் தஞ்சமடைந்த நிவேதா மற்றும் அவரது மகனை காண வந்த பிரபாகரன், கடந்த மூன்றாம் தேதி வேலுச்சாமியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் வேலுச்சாமியின் கழுத்தை சரமாரியாக அறுத்து உள்ளார். தொடர்ச்சியாக, நிவேதாவை தாக்க முற்பட்ட நிலையில், அவர் அறையை பூட்டிக்கொண்டு தப்பி உள்ளார்.

இதனையடுத்து, அவ்விடத்தில் இருந்து பிராபகரன், தனது மகனை அழைத்து கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றிருக்கிறார். கழுத்தில் அறுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலுச்சாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காங்கேயம் காவல் துறையினர் தாங்கள் கொடுத்த புகாரின் பேரில் முழுமையாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும், பிரபாகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர் புகார் மனு அளித்து உள்ளர்.

அத்துடன், “பிரபாகரனால் தனக்கும் தனது தந்தைக்கும் உயிருக்கு ஆபத்து உள்ள நிலையில், அவரிடம் இருந்து தனது மகனை மீட்டுத் தரக் கோரியும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், பிரபாகரன் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றும், பாதிக்கப்பட்ட நிவேதா அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *