நம்மில் பலருக்கும் இரவில் தூங்குவதற்கு முன்பு பால் குடிக்கும் பழக்கம். இருப்பினும், பெரும்பாலானோருக்கு இரவில் பால் குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? என்று சந்தேகமும் இருக்கும். உண்மையில், இரவில் பால் குடிக்கும் பழக்கும் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இருக்கிறது. ஏனென்றால், பாலில் தூக்கத்தை வரவழைக்கும் ‘டிரிப்டோபான்’ என்ற அத்தியாவசிய அமினோ அமிலம் இருக்கிறது. இது நமது உடலில் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய ‘செரோடோனின்’ என்ற ஹார்மோனை அதிகளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல், பாலில் உள்ள அதிகப்படியான கால்சியம் சத்து நமது பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு 1 டம்ளர் வெதுவெதுப்பான பால் குடிப்பதால், இதுபோல பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். தற்போது இந்த பதிவில் இரவில் பால் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நன்றாக தூக்கம் வரும்
பாலில் உள்ள டிரிப்டோபான் மற்றும் பயோஆக்டிவ் பெப்டைடுகள், நமது உடலில் ஹாப்பி ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால், பதட்டம் மற்றும் மன அழுத்தம் முழுவதுமாக குறைந்து, உடலும் மனமும் அமைதி பெறும். மேலும், இரவில் பால் குடிப்பது இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு 1 டம்ளர் பால் குடித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையே இருக்காது.
எலும்புகளை பலப்படுத்தும்
இரவில் பால் குடிப்பதால், உடல் முழுவதும் கால்சியம் சீராக இருக்கும். இதனால் பிற்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வராமல் தடுக்கலாம். பாலில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. இது நமது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது. மேலும், வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகள் இரவில் தினமும் 1 டம்ளர் குடித்துவந்தால் எலும்பு வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
இளமையான சருமத்தை பெறலாம்
பாலில் உள்ள வைட்டமின் பி12 சருமத்தில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இதனால், சருமம் நெகிழ்ச்சித் தன்மையுடனும், பளபளப்புடனும் இருக்கும். எனவே, தினமும் இரவில் பால் குடித்து வருவதன் மூலம் இளமையான சருமத்தை பெறலாம். அதுமட்டுமல்லாமல், பாலில் உள்ள வைட்டமின் ஏ நமது உடலில் புதிய செல்களை உருவாக்கி, பல விதமான தோல் நோய்களில் இருந்து நமது சருமத்தை பாதுக்காக்கிறது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர்
தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் பால் குடிப்பது, மன அழுத்தத்தைக் குறைக்க அற்புதமான வழி என்றே சொல்லலாம். பாலில் உள்ள புரதம், லாக்டியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால், தசைகள் தளர்வடைகிறது. மேலும், மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசோல் என்ற ஹார்மோன் அளவை குறைத்து, ஹாப்பி ஹார்மோன்களை அதிகரிக்கிறது.
செரிமான பிரச்சனைகளை போக்கும்
இரவில் குளிர்ந்த பால் குடித்துவருவதன் மூலம் அமிலத்தன்மையிலுருந்து உடனடியாக நிவாரணம் பெற முடியும். காரணம் பாலில் வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் அமிலத்தன்மையை குறைக்கக்கூடிய கால்சியம் சத்து ஏராளமாக இருக்கிறது. இத்துடன் வாய்வு, மலச்சிக்கல் போன்ற பிற பொதுவான வயிறுச் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறது.