சாலையில் நடந்து சென்ற பெண்ணை, போதை ஆசாமி ஒருவர் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் நடந்திருக்கிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி இருப்பதாக எதிர் கட்சிகள் தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டை நிறுபிக்கும் வகையில், இந்த குற்ற சம்பவமும் கூடவே வந்து வலு சேர்க்கிறது.
சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டு பகுதி நேரமாக கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணி செய்து வருகிறார்கள் கோகுல லட்சுமி மற்றும் சகிரா பேகம்.
இவர்கள் இருவரும் நேற்று இரவு பணி முடிந்து கோடம்பாக்கம் வெள்ளாளர் தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழயிகா மது போதையில் எதிரே வந்த ஒருவர், அந்த 2 பெண்களையும் தாக்கியதுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், பதறிப்போன அந்த பெண்கள் கத்தி கூச்சலிடவே, அந்த போதை ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இது குறித்து, வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சாலையில் நடந்துச் சென்ற பெண்ணை தாக்கிய அந்த போதை ஆசாமி யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவிகள் 2 பேரை கன்னத்தில் அறைந்த போதை ஆசாமியை போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “மனைவி, மகள் பிரிந்து சென்று விட்டாதால், மன உளைச்சலில் அந்த மாணவிகளை தாக்கியதாக” அந்த நபர் வாக்குமூலம் அளித்து உள்ளார். இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.