ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14, 2024 அன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ள நிலையில், வருகின்ற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரசுக்குத்தான் சீட்டு ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஒருவேளை, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டால், அது 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்று தவெக நிர்வாகிகள் சொல்லி வருகிறார்கள். இதையடுத்து, அந்த தொகுதியில் தவெகவுக்கு செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிய சர்வே எடுக்கச் சொல்லியும், சர்வே முடிவுகள் வந்த பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கலாம் என்று நிர்வாகிகளிடம் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், சர்வே முடிவுகள் விஜய் பார்வைக்கு சென்றுள்ளது. அதைப்பார்த்து அவர் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதாவது, ஈரோடு தொகுதியில் தவெகவுக்கு போதிய ஆதரவு இல்லை என்று சர்வே முடிவுகள் வந்திருக்கிறது. இதையடுத்து, 2026 ஆம் ஆண்டு முதல்வர் பதவியை குறிவைத்து காத்திருக்கும் இவருக்கு, இந்த ரிசல்ட் போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்து இடைத்தேர்தலில் தவெக போட்டியிடாது என்று விஜய் முடிவெடுத்துள்ளார்.
அதே நேரம், இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று விஜய் முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.