Sun. Dec 22nd, 2024

Congress Protest: அமித்ஷாவை காப்பாத்த இப்படி வீணா கதை கட்டாதீங்க.. இது ஒரு திட்டமிட்ட சதி.. கொந்தளித்த பிரியங்கா காந்தி..

அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழகம், டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால், நாடாளுமன்ற வளாகமே போர்க்களமாக மாறியது.

இந்த போராட்டத்தின் போது பாஜக மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளுக்கு இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதில், பாஜக எம்பி பிரதாப் சாரங்கி -க்கு மண்டை உடைந்தது. இதையடுத்து நாடாளுமன்றம் 2 மணி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்வையடுத்து, பாஜக எம்பிக்களை ராகுல் காந்தி தான் தள்ளிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், இந்திய கூட்டணி எம்பிக்களை நாடாளுமன்றத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி முழக்கமிட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி வதேரா, ‘அம்பேத்கரை இழிவுப்படுத்தி பேசிய அமித்ஷாவை காப்பாற்றுவதற்காகவே இந்த மோதல் நடத்தப்பட்டது. இந்த மோதலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கீழே தள்ளப்பட்டதோடு, ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எம்பியும் அவர் மீது விழுந்துவிட்டார்.

ராகுல் ஜி அம்பேத்கரின் புகைப்படத்தை ஏந்தியவாறு ‘ஜெய் பீம்’ என்று கோஷாமிட்டபடி, அமைதியாக தான் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அவரை தடுத்தது யார் என்பதை நீங்களே தெளிவாக அந்த வீடியோவில் பாருங்கள். நாங்கள் பல நாட்களாக அமைதியாக தான் போராட்டம் நடத்தி வருகின்றோம். மற்றவர்களுக்கும் வழி விடுகிறோம். ஆனால், இன்று பாஜக எம்பிக்கள் வேண்டுமென்றே எதிர்ப்பு தெரிவித்ததினாலேயே இந்த கைகலப்பு நிகழ்ந்தது’ என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

‘இப்போது, அமித்ஷா ஜியை காப்பாற்றுவதற்காக பய்யா (ராகுல் காந்தி) யாரையோ தள்ளிவிட்டதாக பிரச்சனையை திசை திருப்ப பாஜகவினர் பொய்யாக குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல், என் கண் முன்னாடி தான் கார்கே ஜி கீழே விழுந்தார், அப்போது அவர் மீது ஒரு கம்யூனிஸ்ட் எம்பியும் விழுந்துவிட்டார். இது ஒரு திட்டமிடப்பட்ட சதி. அவர்களின் உண்மையான எண்ணம் இதிலிருந்தே தெரியவந்துவிட்டது. ‘ஜெய் பீம்’ கோஷமிடுமாறு பாஜக எம்பிக்களுக்கு நான் சவால் விடுவதாகவும்’ கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, ‘பாஜக தொடர்ந்து அம்பேத்கரை அவமதித்து வருவதோடு, தலித் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்காக அவர் வலியுறுத்திய உரிமைகளை அவமானப்படுத்தி வருகின்றனர். இந்த நாட்டிற்கு அரசியல் சாசனத்தை அளித்து, லட்சக்கணக்கான தலித் மக்களுக்கு அதிகாரம் அளித்த பாபா சாகேப்பை பாஜக மீண்டும் மீண்டும் அவமதித்து வருகிறது. எனவே, பாஜக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கட்டாயம் கேட்டே ஆக வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *