சரவணா ஸ்டோர்ஸின் 235 கோடி ரூபாய் அசையா சொத்துக்களை முடக்கம் செய்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்த நிலையில், அந்த சொத்துக்களை எல்லாம் இந்தியன் வங்கியிடம் ஒப்படைத்து உள்ளது.
சென்னை திநகர் பகுதியில் இயங்கி வந்த சரவணா கோல்டு பேலஸ் நிறுவனம் கடந்த 2017- ஆம் தேதி இந்தியன் வங்கியில் 240 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. வங்கியில் வாங்கிய இந்த கடனை முறைகேடாக பெற்று மோசடி செய்ததாக வங்கியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா என்பவர், சி.பி.ஐ.யில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், இந்தியன் வங்கியில் பெற்ற கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 480 கோடி ரூபாயாக சேர்ந்தது. இதனையடுத்து, தி. நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 2 கடைகளின் பொருட்களை ஜப்தி செய்து, கடைகளுக்கு சீல் வைக்க இந்தியன் வங்கி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நடத்திய எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் படி, கடந்த ஜனவரி மாதம் 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து, சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து, அமலாக்கத்துறை விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 235 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை தற்போது முடக்கி அதிரடியான நடவடிக்கை மேற்கொண்டது.
அதன் தொடர்ச்சியாக, இது குறித்து விசாரணை நீதிமன்றத்தில் இந்தியன் வங்கி தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், “அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட 235 கோடி ரூபாய் சொத்துக்களை இந்தியன் வங்கியிடம் வாங்கிய கடனுக்காக அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்” என்று, நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அந்த சொத்துக்களை இந்தியன் வங்கியிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதே போல், இது போன்று வங்கி மோசடியின் மூலமாக அமலாக்கத்துறை முடக்கிய சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.