இன்னிக்கு உலக தியேட்டர்கள் தினம்…
சினிமா
சின்ன வயசுல தியேட்டர்ல போய் சினிமா பார்த்ததெல்லாம் அம்மாவோட தான். அப்பாவுக்கு அவ்வளவா சினிமா மேல இன்ட்ரெஸ்ட் இருந்து நான் பார்த்ததில்லை. பழைய படம், எம் ஜி ஆர் படம்னா உக்காந்து பார்ப்பார். ஆனா அம்மாவுக்கு நிறைய சினிமா வேணும். எவ்வளவு பார்த்தாலும் போரடிக்காது. அப்பா மின்சார வாரிய ஊழியர். 3 வருஷத்துக்கு ஒருவாட்டி அவங்களே கொடுக்கலைனாலும் இவரா ட்ரான்ஸ்பெர் வாங்கிருவாரு. அதுவும் நாங்க இருந்ததெல்லாம் கிராமங்கள் தான். தேடி தேடி மேப்ல இல்லாத ஊரா பார்த்து ட்ரான்ஸ்பெர் வாங்குவாரு. 3 வது வரைக்கும் நான் படிச்சது நெகமம், பொள்ளாச்சி பக்கத்துல. 3 வது பாதிலேயே அடுத்த ட்ரான்ஸ்பெர் வாங்கிட்டாரு. இந்த தடவை ஊதியூர், காங்கேயம் டு தாராபுரம் வழில இருக்கு. அங்கிருந்து தான் என் சினிமா பயணம் ஆரம்பிச்சது. காங்கேயம் சொர்க்கம், ஆனந்த் தியேட்டர்ல ஏகப்பட்ட படங்கள் பார்த்திருக்கேன். குறிப்பிட்டு சொல்லும்படியான படங்கள் ஞாபகம் இல்லை. ஆனா இப்பவும் அந்த வழியா போகும்போதெல்லாம் அந்த தியேட்டரை பார்க்காம விட்டதில்லை.
இந்த பக்கம் தாராபுரம் தான் நான் பிறந்த ஊரு. எங்க தாத்தா அங்க தான் இருந்தாரு. அவரை பார்க்க போகும்போதெல்லாம் ஒரு சினிமா உறுதியா பார்க்கலாம். சத்யா, வசந்தா, விசாலாட்சி னு மூணு தியேட்டர்ல தான் என் பால்ய கால படங்கள் எல்லாமே. அடுத்த 3 வருஷ ட்ரான்ஸ்பெர் எல்லப்பாளையம் புதூர்னு ஒரு ஊரு. இந்த ஊரு எங்க இருக்குன்னா, திருப்பூர்ல இருந்து தாராபுரம் போகிற வழில கொடுவாய்னு ஒரு ஊர் இருக்கு. அங்க தான் எனக்கு பள்ளிக்கூடம். அங்கிருந்து காங்கேயம் போற வழில 3 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. 10 வது பாதி வரைக்கும் அங்க தான். ஒரு பக்கம் திருப்பூர், இன்னொரு பக்கம் காங்கேயம், இந்த பக்கம் தாராபுரம். அப்போ எனக்கு சளி தொந்தரவு ஜாஸ்தியா இருக்கும். வாராவாரம் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி இருக்கும். தாராபுரம் தான் கூட்டிட்டு போவாங்க. அப்படி போகும்போதெல்லாம் சினிமா தான்.
தாராபுரத்துல சத்யா, வசந்தா ரெண்டும் தான் முக்கியமான தியேட்டர். விசாலாட்சி அப்போ செகண்ட் ரிலீஸ் தான் பண்ணுவாங்க. எல்லப்பாளையம் புதூர்ல இருக்கும் போது என் நண்பன் ராஜாவை பார்த்து ரஜினி ரசிகன் ஆனேன். ரஜினி தான் அவனுக்கு எல்லாம். அந்த சமயத்துல தான் தாராபுரம் விசாலாட்சி தியேட்டர் ரினியூ பண்ணி தளபதி படம் ரிலீஸ் ஆச்சு. தியேட்டரே திருவிழா மாதிரி இருந்த காட்சி இன்னும் நியாபகம் இருக்கு. அதே தியேட்டர்ல தான் செம்பருத்தி, சிங்காரவேலன் படங்கள் பார்த்திருக்கேன். சத்யா தியேட்டர்ல புதுவசந்தம், ஊர்மரியாதை, இன்னும் நிறைய படங்கள். எல்லப்பாளையம் புதூர்ல இருந்து காங்கேயத்துக்கு 13 கிலோ மீட்டர். ஒரு தடவை பக்கத்துக்கு வீடு அண்ணனோட சைக்கிலேயே காங்கேயம் போய் சினிமாக்கு போய்டேன். வீட்டுல சொல்ல கூட இல்ல. வரும் போது இருட்டிருச்சு, பயத்துல வீலுக்குள்ள காலை விட்டு குதிக்கால்ல செம்ம அடி. வீட்டுக்கு வந்து சேர்ந்து அப்பாகிட்ட அடி வாங்கினது தனிக்கதை.
அம்மாவோட படம் பார்க்கறதுல என்ன பிரச்சினைனா படத்துல சண்டை வந்துதுன்னா இங்க குத்துடா, அடிடானு சவுண்ட் வரும். அங்க செண்டிமெண்ட் ஸீன் வந்துதுன்னா இங்க அழுகை வரும். அங்க பொண்ணுகளை கொடுமைப்படுத்துனா இங்கேர்ந்து சாபம் வரும். அம்மாவால கண்ட்ரோல் பண்ணவே முடியாது. அந்த ரத்தம் வேற எப்படி இருக்கும். நானும் அப்படிதான். படத்துல பைட் ஸீன் வந்தா ரட்சகன் நாகார்ஜுனா மாதிரி நரம்பெல்லாம் முருக்கேரும். செண்டிமெண்ட் சீன்ல கண்ணீர் வீட்டுக்கு அழுத படம்லாம் இருக்கு. ஒரு வயசுக்கு மேல அதெல்லாம் கண்ட்ரோல் பண்ணிட்டு உக்காந்துருப்பேன்.
10 வது படிக்கும் போது நானும் இன்னும் சில ஸ்கூல் ப்ரெண்ட்ஸும் சேர்ந்து கிரிக்கெட் பேட் வாங்கலாம்னு ஸ்கூலை கட் அடிச்சிட்டு திருப்பூர் போனோம். பேட் வாங்கிட்டு நேரா படத்துக்கு தான், கேப்டன் மகள் படம், பாதில வந்துட்டோம். டைமண்ட் தியேட்டர்ல பிரம்மா படம், எஸ் ஏ பி தியேட்டர்ல சின்ன கவுண்டர் படம் பார்த்தது இன்னும் மறக்கல. அண்ணாமலை படம் திருப்பூர் சாந்தி தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு. படம் வந்து 2 வது நாளோ 3 வது நாளோ பார்த்தேன். அப்பெல்லாம் லேடிஸ் க்கு தனி டிக்கெட் கவுண்டர் இருக்கும். அதனால ஈஸியா டிக்கெட் கிடைச்சது. பயங்கர ஆராவாரமா பார்த்த படம் அது தான். டென்த் பப்ளிக் எக்ஸாம் சென்டர் எங்களுக்கு பொங்கலூர் தான். கடைசி பரீட்சை முடிஞ்சு பசங்க எல்லாம் திருப்பூர்ல வால்டர் வெற்றிவேல் படத்துக்கு போய்ட்டாங்க. கூட இருந்த பொண்ணுங்க திருப்பூர் போக முடியாதுனு சொன்னதால் நாங்க ஒரு 6 மட்டும் பல்லடம் வந்து திருமதி பழனிசாமி படம் பார்த்தோம்.
வழக்கம் போல 10 வது பாதில ட்ரான்ஸ்பெர். இந்த தடவை ஈரோடு டு வெள்ளக்கோயில் வழில இருக்கற எழுமாத்தூர் ங்கற ஊர். அங்கேயே மண்கரடு ஒரு ஊர்ல தான் இருந்தோம். எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே ஒரு டெண்ட் கொட்டாய் இருந்தது. வெள்ளிக்கிழமை ஆனா படம் மாத்துவாங்க. சாயங்காலம் சரியா 6 .15 மணிக்கு கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலைனு பாட்டு பாடும். சாயங்காலம் படத்துக்கு போகணும்னா ஸ்கூலேர்ந்து வந்த உடனே நல்ல புள்ளையா உக்காந்து படிச்சு அப்பாவோட கண்ணுல படர மாதிரி எல்லா வேலையும் செய்வோம். பாட்டு போட்ட உடனே அம்மாவை கெஞ்சி கூத்தாடி ரெகமண்ட் பண்ண சொல்லி காசு வாங்கிட்டு சிட்டா பறந்துருவோம். அப்பாகிட்ட நேரடி டீலிங் இருந்ததே இல்லை. எல்லாம் அம்மா தான்.
அந்த தியேட்டர் பேரு மறந்துருச்சு. அங்க தான் தெலுங்கு டப்பிங் படம்லாம் பார்த்தது. வைஜெயந்தி ஐ பி எஸ், போலீஸ் லாக்கப், சத்ரு எப்படி நிறைய படம். சனி ஞாயிறு மட்டும் தான் பகல் காட்சி. மத்த படம்லாம் ஈரோடு தான். அம்மாவோட ஈரோடு போகும் போதெல்லாம் படம் தான். ஈரோடு, அபிராமி, தேவி அபிராமி, முத்துக்குமார், ஆனூர், ராயல் வி எஸ் பி, ரவி, மாணிக்கம் னு அங்க படம் பார்க்காத தியேட்டர்களே இல்லை. பாட்ஷா படம் அபிராமி, முத்துகுமார்னு ரெண்டு தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு. அபிராமில பிளாக்குல டிக்கெட் வித்தாங்கனு முத்துக்குமார் தியேட்டர்ல தான் பார்த்தேன். ஜாக்கிசானையம், ஆங்கில படங்களையும் அறிமுகப்படுத்தி வச்சது வி எஸ் பி தியேட்டர் தான், போலீஸ் ஸ்டோரி படத்துக்கு வந்த கூட்டமும், ஜாக்கிக்கு கட்டவுட் வச்சது வரலாறு. ரவி தியேட்டர்ல ஹிந்தி படம். டி டி எல் ஜெ, பரதேஸ் னு ஷாரூக்கானையும் அங்க தான் தெரிஞ்சுகிட்டேன்.
அதே ஈரோட்ல ராஜாராம், நடராசா தியேட்டர்ல ஷகிலா படமும் பிட்டு படமும் பார்த்தது எஸ்டிடி. அதெல்லாம் மறக்க முடியுமா? கோவைல அப்சரா தியேட்டர்.
திருச்சி மாரிஸ் காம்ப்ளக்ஸ் மறக்க முடியாது. பாட்டியோட பூர்வீக வீடு அங்க இருந்தது. மலைகோட்டைக்கு எதிர்ல தான் வீடு. அங்கிருந்து நடந்தே போவோம். தேவர்மகன், ரோஜா அங்க பார்த்தது தான். பாண்டிச்சேரில எங்க வீட்டு வேலன் பார்த்த ஞாபகம் இருக்கு. பெங்களுர்ல ஒரு இந்தி படம் பார்த்துருக்கேன்.
அப்புறம் என் வாழ்க்கைல முக்கியமான தியேட்டர் மொடக்குறிச்சி விஜயா. க்ரூப் ஸ்டெடி பன்றேன்னு சொல்லிட்டு அந்த தியேட்டர்ல தான் எல்லா ஸ்டெடியும் பண்ணினோம். அதுவே ஒரு பெரிய கதை. அப்புறம் உடுமலைப்பேட்டை லதாங்கி, அனுஷம், தாஜ் தியேட்டர்கள், சேலம் கைலாஷ், பிரகாஷ் தியேட்டர்கள்னு எங்க போனாலும் அந்த ஊர் தியேட்டருக்கு ஒரு அட்டெண்டென்ட்ஸை போட்ருவோம். கோவைக்கு பக்கத்துல இருக்கற அரசூர்ல தங்கி வேலை செஞ்சுட்டு இருந்த போது மாசத்துக்கு ஒரு தடவை சம்பள நாள் வந்த உடனே படத்துக்கு போவோம். சோமனூர் சங்கீதா, சவீதா தியேட்டர்ல. கோவை ராகம் தியேட்டர்ல இந்தியன் படம் பார்த்துட்டு சைக்கிள் பெல் சத்தம் எல்லாம் காதை சுத்தி கேட்டுட்டு இதுவல்லவோ தியேட்டர்னு சிலிர்த்து போன அனுபவம் உண்டு. காந்திபுரம் ஏரியாவுல தான் தங்கி இருந்ததால் கற்பகம் காம்ப்ளெக்ஸ் தான் நமக்கு எப்பவும் பேவரைட்.
எத்தனையோ தியேட்டர்ல படம் பார்த்திருந்தாலும் இன்னமும் அந்த போதை குறையவே இல்லை. டிக்கெட் வாங்கிட்டு வேகவேகமா வண்டியை பார்க் பண்ணிட்டு, ஓடி போய் நம்ம சீட்டுல உக்காந்த உடனே எதையோ சாதிச்சா மாதிரி ஒரு பீல். இப்ப என் வாரிசுகள் டிக்கெட் வாங்கின உடனே சீக்கிரம் வாப்பா, படம் போட்ருவாங்கனு சொல்லும் போது, என் இனமடா நீ னு தோணுது இல்ல. அதே ரத்தம் அப்படி தானே இருக்கும்.
– மகாதேவன் சி