காதலித்து பாலியல் வன்கொடுமை.. வெளிநாடு தப்பிச் சென்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பியவரை தட்டித்தூக்கிய போலீஸ்!
இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, வெளிநாடு தப்பிச் சென்றவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்த நிலையில், போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடந்த 2012 ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை, கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். அப்போது, அங்கு உடன் படித்து வந்த கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது என்ற மாணவர், அந்த மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தைக்ள கூறி, அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த பெண் கல்லூரி படிப்பை முடிந்த நிலையில், சென்னையில் வேலை செய்து வந்திருக்கிறார் அந்த இளம் பெண். அப்போது, முகமது என்ற அந்த இளைஞர், சென்னை வந்து இளம் பெண் உடனான தனது காதலை நீட்டித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை ஆசையான வார்த்தைகளை கூறி, தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு முகமது, துபாய் சென்று வேலை செய்வதாக கூறிவிட்டு, அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல் துபாய்க்கு சென்று உள்ளார். அதன் பின், துபாய் சென்றவுடன் அவருக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, இளம் பெண் காதலனின் தாயாரிடம் கேட்டபோது ரூபாய் 5 லட்சம் பணம் தர வேண்டும் என்றும், முஸ்லிம் மதத்திற்கு மாற வேண்டும் என்று கூறி, இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி குர் ஆன் படிக்க வைத்து, நோன்பு இருக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண், கடந்த 2020 ஆம் ஆண்டு வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து, முகமதுவுக்கு எதிராக “லுக் அவுட் நோட்டீஸ்” வழங்கி விசாரணை நடத்தி வந்தனர்.
குறிப்பாக, மதமாற்ற தடைச் சட்டம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தான், இன்று அதிகாலை முகமது துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த போது, விமான நிலைய அதிகாரிகளால் “லுக் அவுட் நோட்டீஸ்” காரணமாக அவரை பிடித்து வடபழனி அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விமான நிலையம் சென்று 27 வயதான முகம்மதுவை என்ற இளைஞரை கைது செய்த வடபழனி போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, வெளிநாடு தப்பிச் சென்றவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்த நிலையில், போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.