நமது உடலில் ஹார்மோன்களை உருவாக்க கொலஸ்ட்ரால் அத்தியாசியமான ஒன்று. அதுமட்டுமல்லாமல், நாம் உண்ணும் கொழுப்பு பொருட்களை ஜீரணிக்கவும் அவை தேவை. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் என இரண்டு வகை இருக்கின்றன. இதில் நல்ல கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இதயத்திற்கு நல்லது மற்றும் இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்களின் ஆபத்து குறைவு. சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலின் நல்ல கொலஸ்ட்ராலின் அளவுகளை இயற்கையாகவே அதிகரிக்க முடியும்.
கொழுப்பு நிறைந்த மீன்
கொழுப்பு நிறைந்த மீன்களில் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இரத்தக் கட்டிகள் உருவாவதையும் தடுக்கும். எனவே, சால்மன், சூரை, கானாங்கெளுத்தி, ஹெர்ரிங், ட்ரௌட் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை வாரத்தில் ஒருமுறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அவகேடோ பழம்
அவகேடோ பழத்தில் நார்ச்சத்து மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இவை நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் செய்கிறது. தினமும் ஒரு அவகேடோ பழத்தை சாப்பிட்டு வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும்.
முழு தானியங்கள்
நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க விரும்பினால், ஓட்ஸ், பார்லி, சோளம், ப்ரவுன் அரிசி, கோதுமை, தினை போன்ற முழு தானியங்களை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல், பருப்பு வகைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். இவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன, அவை உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகின்றன.
நட்ஸ்
பாதாம், வால்நட், பிஸ்தா உள்ளிட்ட நட்ஸ் சாப்பிடுவது இதய நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவும். அதுமட்டுமல்லாமல், சிலருக்கு நல்ல கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தவும் உதவுகிறது. அனைத்து கொட்டைகளிலும் கலோரிகள் அதிகம், எனவே தினமும் குறைந்த அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
விதைகள்
சியா விதை, பூசணை விதை, ஆளி விதை உள்ளிட்ட விதைகளில் ஒமேகா -3 கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு விதையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நாள்பட்ட நோய்களையும் குறைக்கிறது.