குஜராத்: இளைஞர் ஒருவர் தனக்கு பிடிக்காத வேலையில் இருந்து விலகுவதற்காக தன்னுடைய நான்கு விரல்களை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தை சேர்ந்தவர் மயூர் தாராபாரா. 32 வயதான இவர் வரச்சா மினி பஜாரில் அமைந்துள்ள தனது உறவினர் ஒருவருடைய நிறுவனத்தில் கம்பியூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வேலை அவருக்கு பிடிக்கவில்லை என்பதால், அந்த வேலையில் இருந்து விலக நினைத்திருக்கிறார்.
ஆனால், அதை தனது உறவினரிடம் சொல்ல தைரியமில்லாமல், கை விரல்களை வெட்டிக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி, புதியக் கத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு கடந்த 8 ஆம் தேதி இரவு அம்ரோலி சாலை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கு, தன்னுடைய இடது கையில் முழங்கை பகுதியில் கயிறு ஒன்றை இருக்கமாக கட்டிக்கொண்டு, 4 விரல்களை தானே வெட்டிக் கொண்டுள்ளார். பின், வெட்டப்பட்ட விரல்கள் மற்றும் கத்தியை ஒரு பையில் போட்டு தூக்கியும் வீசியுள்ளார். பின்னர், தன் நண்பர்களை அழைத்து தன்னுடைய விரல்களை யாரோ வெட்டிவிட்டதாக கூறி கதறியிருக்கிறார்.
இதனால் பதறிப்போன அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, இந்த சம்பவம் குறித்து போலீஸ் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீஸார், மாந்தீரிகம் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த சம்பவம் நடந்திருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணையை ஆரம்பித்தனர்.
மேலும், தாராபாரா சொன்ன இடத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, தான் மயூர் தாராபாரா தன்னுடைய விரல்களை தானே வெட்டிக் கொண்டு நாடகமாடியது அம்பலமானது. இது குறித்து போலீசார் அவரை அழைத்து விசாரித்தபோது அவர் உண்மையைக் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.