தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று இரவு முதலே சென்னை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து, இன்று தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, திருநெல்வேலி மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை அறிவிப்பால் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும், 9 ஆம் வகுப்புகளுக்கு இன்று நடக்க இருந்த ஆங்கில தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.