TNPSC தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே. பிரபாகரை நியமிக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, புதிய தலைவராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு ஒரு தலைவரும், 14 உறுப்பினர்களும் இருக்கலாம். தேர்வாணையத்தின் தலைவராக 2020-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார்.
இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இவரைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன், அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான கோப்பினை ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், அதற்கு பல்வேறு விதிமுறைகளை சுட்டிக்காட்டி ஆளுநர் சைலேந்திரபாபுவின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
இதனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் நியமிக்கப்படாமல் காலியாக இருந்து வந்தது. இதனையடுத்து, முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு உடனடியாக தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்து பரவலாக முன் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே பிரபாகரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்து உள்ளார்.
அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும் தமிழக ஆளுநருக்கு இடையே இருந்து வந்த மோதல், இதன் மூலம் முடிவுக்கு வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.