சிலைக்கு மாலை அணிவிக்கும் போது மாணவர்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
பச்சையப்பன் கல்லூரி நிறுவனரின் 231 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கல்வியாளர்கள் ஏராளமானோர் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள பச்சையப்ப முதலியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் யாரும் வரவில்லை. இந்த நிலையில் இன்று அரக்கோணம், கும்மிடிபூண்டி என ஒவ்வொரு ரூட் மாணவர்களும் கூட்டமாக வந்து பச்சையப்ப முதலியாரின் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். அப்போது, அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பச்சையப்பன் கல்லூரி வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல, மாணவர்கள் மோதலை தடுக்க மின்சார ரயில்களிலும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பேருந்து வழித்தடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல், சென்னையில் மற்றொரு சம்பவமாக, கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் காவலர் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் சென்னன். அவர், இன்று அதிகாலையில் தி.நகர் பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் நிலை தடுமாறி காவலர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர்.
இதில் காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய ஒருவர் போலீசிடம் சிக்கி விட்டார். மற்ற இரண்டு இளைஞர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
மெரினா கடற்கரைக்கு சென்று கஞ்சா புதைத்து விட்டு திரும்பி செல்லும் போது, விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல், சென்னை கீழ்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த பெங்களூரு இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் கீழ்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, கீழ்பாக்கம், கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
சந்தேகத்தின் பேரில், அவரை சோதனை செய்தபோது, அவர் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள் வைத்திருந்த பெங்களூரைச் சேர்ந்த 23 வயதான ஜீவா என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 29 கிராம் மெத்தம்பெட்டமைன், செல்போன் மற்றும் பணம் 3 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஜீவா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.