High blood sugar symptoms in tamil: முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் ஏற்படும். ஆனால், இன்றைக்கு இளம்வயதினரையும் விட்டு வைக்காமல், அனைவருக்கும் பாரபட்சமின்றி வருகிறது. இதற்கெல்லாம், முக்கியமான காரணம் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, ஃபாஸ்ட்புட் அதிகம் உட்கொள்வது, மனஅழுத்தம், இரவில் சரியாக தூங்காமல் இருப்பதுமே ஆகும்.
நமது உடலால் போதுமான அளவு இன்சுலின் உர்பத்தி செய்யப்படாத போது அல்லது இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாத போது ஏற்படும் ஒரு நாள்பட்ட நோயே சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்). இப்படி இன்சுலினில் பிரச்சனை ஏற்படும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதை ஹைப்பர் கிளைசீமியா என்று கூறுவர். இதனால், சிறுநீரக பிரச்சனை முதல் இதய பாதிப்பு வரை பல மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்.
இருப்பினும், இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும். அவற்றை வைத்து சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பல பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும். தற்போது, இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், வழக்கத்தை விடவும் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். குறிப்பாக, இரவு நேரத்தில் அதிகமாக சிறுநீர் கழிக்க எழுந்திருப்பீர்கள்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது, உடலில் நீரிழப்பு ஏற்படும். இதனால், அதிகமாக தாகம் எடுக்கும். தண்ணீர் குடித்தாலும் அடிக்கடி தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். அப்படி இருந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
நாட்கள் செல்ல செல்ல பார்வை மங்கலாகிக் கொண்டிருக்கும். இதற்கு காரணம் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும்போது, கண்களில் உள்ள இரத்தநாளங்கள் பாதிக்கப்படுவதே ஆகும். இதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், பிற்காலத்தில் மோசமான கண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
பொதுவாக ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் சீக்கிரம் ஆறிவிடும். ஆனால், இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால், காயம் சீக்கிரம் குணமாகது. சிலசமயங்களில் சிறிய காயம் குணமாகவே மாதக்கணக்கு ஆகும்.
ரொம்ப நாட்களாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், அது நரம்புகளில் சேதத்தை உண்டாக்கி, கால்கள் மற்றும் கைகளில் எரிச்சல், கூச்ச உணர்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.