தமிழ்நாட்டில் பல்வேறு பொது இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டு உள்ளது குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, தமிழ் நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதாவது, கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ் நாட்டில் 22 ஆயிரத்து 364 திருநர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் வழங்கப்படாமல், அடிப்படை உரிமை மறுக்கப்படுவதால், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒருவர் செல்லும் வகையில் பாலின சார்பற்ற கழிப்பிடங்களை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று, பிரெட் ரோஜர்ஸ் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கோரி இருந்தார்.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் பொது இடங்களில் ஏற்கனவே உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடங்களை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்னும் சில இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்து உள்ளது நீதிமன்றம்.