Tue. Jul 1st, 2025

Wash Sheets and Pillowcases | பெட்ஷீட், பில்லோ கவரை மாச கணக்குல துவைக்காம யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா? இத தெரிஞ்சிக்கோங்க..

நாள் முழுக்க நிற்க கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். இரவில் தூங்கும்போது மட்டுமே ஓய்வு என்பதே கிடைக்கிறது. அந்த ஓய்வு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமென்றால், நாம் தினமும் தூங்கும்போது பயன்படுத்தும் மெத்தை விரிப்பு, தலையணை உறை மற்றும் போர்வைகள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் மாத கணக்கே ஆனாலும் மெத்தை விரிப்பு, தலையணை உறை மற்றும் போர்வைகளை துவைப்பதே கிடையாது.

இப்படி மாத கணக்கில் துவைக்காமல் திரும்ப திரும்ப பயன்படுத்தும்போது, பாடி ஆயில் (body oil), அழுக்கு, வியர்வை, தூசி மற்றும் பாக்டீரியா கிருமிகள் அதிகரித்து சொறி, அரிக்கும் தோலழற்சி, ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இவற்றை தடுக்க மெத்தை விரிப்பு, தலையணை உறை மற்றும் போர்வைகளை எத்தனை நாளுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மெத்தை விரிப்பு:

தினமும் பயன்படுத்தும் மெத்தை விரிப்பை குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் மாற்ற வேண்டும் அல்லது துவைக்க வேண்டும். ஒருவேளை, கோடைக் காலமாக இருந்தால் வியர்வை அதிகமாக வெளியேறும், இது துர்நாற்றம் மற்றும் பாக்டீரியாவை ஏற்படுத்தும். உடம்பு சரியில்லாமல் இருப்பது அல்லது செல்லப்பிராணிகளுடன் தூங்குவது இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒவ்வொரு 3-4 நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டியது அவசியம்.

தலையணை & தலையணை உறைகள்:

தலையணை உறையை வாரம் ஒருமுறை துவைக்க வேண்டும். ஏனென்றால், தோல், முடி, தலையில் வைக்கும் எண்ணெய், அழுக்குகள் அனைத்தும் தலையணை உறையில் இறங்கும். இதனால், அதிகப்படியான பாக்டீரியாக்கள் உருவாகும். எனவே, வாரத்திற்கு ஒரு முறையாவது அவற்றை துவைப்பது கட்டாயம். தலையணை உறையை மட்டும் துவைத்தால் போதாது தலையணையையும் முடிந்தால் மாதம் ஒரு முறை துவையுங்கள்.

போர்வைகள்:

தினமும் தூங்கும்போது போர்வை பயன்படுத்தும் பழக்கம் இருந்தால், அதையும் வாரத்திற்கு ஒரு முறை துவைக்க வேண்டும். நேரடியாக தோலில் படுவதால், உடலில் இருக்கும் கிருமிகள், அழுக்குகள் அவற்றில் ஒட்டிக்கொள்ளும். இதனால், தோல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, வாரம் ஒருமுறை போர்வைகளை மறக்காமல் துவைக்க முயற்சி செய்யுங்கள்.

படுக்கையை சுத்தமான வைத்துக் கொள்ள சில குறிப்புகள்:

படுக்கையில் அழுக்கு மற்றும் பாடி ஆயில் குவிவதை தடுக்க, மாலை அல்லது இரவு தூங்க செல்வதற்கு முன்பு குளியுங்கள்.

மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், இரவில் கட்டாயம் குளித்துவிட்டு தான் தூங்க வேண்டும்.

படுக்கையறையை குளிர்ந்த நிலையில் வைத்துக்கொள்ளுங்கள், இது உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதை தடுக்கும்.

படுக்கையறை ஜன்னல், கதவுகளை எப்போதும் மூடியே வையுங்கள். இதனால், வெளியில் உள்ள தூசு, மண் அதிகமாக உள்ளே படியாது.

முடிந்தவரை செல்லப் பிராணிகளுக்கு தனி படுக்கையை அளிப்பது சிறந்தது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *