ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள், போதிய உடல் உழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் நம்மில் பலரும் சந்திக்கக்கூடிய மிகப் பெரிய பிரச்சனையே உடல் பருமன் தான். ஒருவரின் உயரத்துக்கு ஏற்ற எடையை விட அதிகமாக இருப்பது ஆரோக்கியத்துக்கு அவ்வளவு நல்லது கிடையாது. இருப்பினும், தினமும் சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஃபாலோ செய்வதன் மூலம் ரொம்ப ஈஸியாகவே வெயிட்டை குறைத்து விடலாம்.
இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் உடல் பருமன் பிரச்சனையால் எத்தனையோ உடல்நலக் கோளாறுகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இன்றைக்கு பலரும் சிறு வயதிலேயே மாரடைப்பால் இறப்பதற்கும் காரணமும் இந்த உடல் பருமன் தான். இதை தடுக்க வேண்டும் என்றால் கட்டுகடங்காமல் ஏறும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது ரொம்ப முக்கியம். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமென்றால், அதிகமான உடல் எடை இருப்பவர்கள் தினமும் இந்த 5 நல்ல விஷயத்தை பின்பற்ற வேண்டும்.
உடல் எடை குறைய எளிய வழிகள்:
ஒரே நேரத்தில் உடல் எடையை குறைப்பதற்கும், உடலில் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்கும் சிறந்த வழி தினமும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது தான். ஏனென்றால், மற்ற உணவுகளை காட்டிலும் காய்கறிகளில் ஏக்கச்சக்கமான பிரதான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மேலும், கலோரிகளும் குறைவாக தான் இருக்கும். இதனால், ஒரு பக்கம் வெயிட் குறைவதோடு, மறுபக்கம் ஊட்டச்சத்தும் அதிகரிக்கும். குறிப்பாக முட்டைக்கோஸ், பூசணிக்காய், ப்ரோக்கோலி, பச்சை பட்டாணி, கீரை, காளான், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்க.
முட்டை வெள்ளை கரு, பால் பொருட்கள், பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள் போன்ற புரதச் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால், உடலில் தேங்கிக் கிடக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பு வெகு சீக்கிரமே எரிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், இந்த உணவுகள் பசியை தூண்டும் கிரெலின் ஹார்மோன் உற்பத்தியை குறைத்து, நீண்ட நேரத்திற்கு பசியின்மை உணர்வை கொடுத்து, தேவையில்லாமல் சாப்பிடுவதை தடுக்க உதவும்.
எப்போது உணவு சாப்பிட்டாலும், சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால், தண்ணீரில் கலோரிகள் இல்லை. இதனால், ஒரு அளவுக்கு மேல் உணவை சாப்பிட முடியாது. இது எடையை குறைக்க உதவும் ஒரு ஈஸியான வழியாகும். அதேபோல், தினமும் குறைந்தது 3 லிருந்து 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், குளிர்பானங்கள், டிரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். அதேபோல், டீ, காப்பி மற்றும் உணவுகளில் இனிப்பு சுவைக்காக பயன்படுத்தப்படும் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக தேன் அல்லது வெல்லம் போன்றவை பயன்படுத்துங்க.
வெயிட்டை கம்மி பண்ண உணவு கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். உடலில் உள்ள கொழுப்புகள் கரைய வேண்டுமென்றால், உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். அதிகமாகக் கூட வேண்டாம். தினமும் 30 நிமிடங்கள் போதும். நடைபயிற்சி, அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற எளிமையான உடற்பயிற்சி செய்யலாம். இதனால் உடல் எடை குறைவதோடு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இருதய நோய்கள் வராமலும் தடுக்கலாம்.