ஆலிவ் கொட்டையில் இருந்து எடுக்கப்படும் ஆலிவ் ஆயில் (Olive Oil) சோப்பு மற்றும் லோஷன்கள் போன்ற தோல் பராமரிப்புப் பொருட்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒரு பொருள். இதை இயற்கை மாய்ஸ்சரைசர் என்றே சொல்லலாம். எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் இந்த ஆலிவ் ஆயில். ஏனென்றால், ஆலிவ் ஆயிலை சருமத்துக்கு பயன்படுத்தினால் சருமத்தில் உற்பத்தியாகும் எண்ணெய் பசையை ஈஸியாக தடுக்கலாம். இருப்பினும், எண்ணெய் சருமம் கொண்டவர்கள் ஆலிவ் ஆயிலை நேரடியாக பயன்படுத்துவதற்கு பதிலாக சில பொருட்களுடன் சேர்த்து ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தினால் இரட்டிப்பு பலனை பெறலாம்.
ஆலிவ் ஆயில் – வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஃபேஸ் பேக்
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 ஸ்பூன் வைட்டமின் ஈ ஆயில் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். இதை இரவில் படுக்க செல்வதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதை இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர, மென்மையான எண்ணெய் பசையில்லாத சருமத்தை பெறலாம். மேலும், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் குறைக்கிறது.
ஆலிவ் ஆயில் – பாதாம் ஃபேஸ் பேக்
2 ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 ஸ்பூன் பாதாம் பொடி, 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை (ப்ரவுன் சுகர்) மூன்றையும் நன்றாக பேஸ்ட் போல கலக்கிக் கொள்ளவும். பின்னர், இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 5 நிமிடங்கள் அப்படியே விட்டு, சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளவும்.
இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், எண்ணெய் பசை நீங்கும். சருமம் பளப்பளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.
ஆலிவ் ஆயில் – எலுமிச்சை சாறு
1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், ½ ஸ்பூன் எலுமிச்சை சாறு இரண்டையும் நன்றாக கலக்கி கொள்ளவும். பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி, வட்ட வடிவில் 3 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
5 முதல் 7 நிமிடங்கள் அப்படியே விட்டு, வெதுவெதுப்பான தண்ணீராய் முகத்தை கழுவிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்துவர, எண்ணெய் உற்பத்தியை குறைத்து, சருமத்தை ஈரப்பதமாகவும் மினுமினுப்பாகவும் வைத்துக்கொள்ளும்.
ஆலிவ் ஆயில் – தேன் ஃபேஸ் பேக்
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் இரண்டையும் சேர்த்து கலக்கி, மைக்ரோவேவில் 10 விநாடிகள் லேசாக சூடாக்கிக் கொள்ளவும். மைக்ரோவேவ் இல்லாதவர்கள் சாதாரணமாக டபிள் ஹீட் முறையை பின்பற்றலாம்.
சூடாக்கிய கலவையை கையால் முகம் முழுவதும் தடவி லேசாக மசாஜ் செய்யவும். இதை 10 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைத்து எடுக்கவும். இதை வாரத்திற்கு 2 முறை முயற்சிக்கலாம்.