ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது எப்படி? கொலைக்கு பணம் கை மாறியதும் எப்படி? என்று பல்வேறு கேள்விகளுக்கு போலீசாரின் விசாரணையில் பதில் கிடைத்து உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழ்நாட்டை பதற வைத்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாளுக்கு நாள் புதிய புதிய தகவல்கள் கசிந்துகொண்டே இருக்கிறது. கூடவே புதிய புதிய கைது நடவடிக்கைகளும் நடந்துகொண்டே இருக்கிறது.
இந்த சூழலில் தான், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது எப்படி? கொலைக்கு பணம் கை மாறியதும் எப்படி? என்று பல்வேறு தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
அதன்படி, போலீசாரின் விசாரணையில்,
– கடந்த ஜூன் 5 ஆம் தேதி வேலூரில் வைத்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான திட்டம் உருவாகியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
– வேலூரில் வைத்து ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவை வழக்கறிஞர் அருள் முதலில் சந்தித்ததாகவும்,
“ஆம்ஸ்ட்ராங்கை விட்டு வைத்தால் பொன்னை பாலு உயிருக்கு ஆபத்து” என்று, அருள் மூளைச்சலவை செய்ததும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
– வழக்கறிஞர் அருள் கூறியதை நம்பி, ஆற்காடு சுரேஷின் தங்க பிரேஸ்லெட்டை விற்று 3.50 லட்சம் ரூபாய் பாலுவிடம் வழக்கறிஞர் அருள் கொடுத்து உள்ளார். 3.50 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கூலிப்படையை தயார் செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
– சம்போ செந்திலின் கூட்டாளியும் வழக்கறிஞருமான ஹரிகரன் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வழக்கறிஞர் அருளை தொடர்பு பேசியதும், தெரிய வந்து உள்ளது.
– சம்போ செந்தில் கூறியதாக வழக்கறிஞர் அருளை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஹரிகரன் சந்தித்து 3 பண்டல் மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம் கைமாறியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
– டெலகிராம் செயலி மூலம் சம்போ செந்தில் வழக்கறிஞர் ஹரிகரனுக்கு உத்தரவுகளை தொடர்ந்து வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
– இதையடுத்து தான், ஹரிகரன் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சம்போ செந்திலை தேடி வருகின்றனர்.
– ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கோடாரி ஒன்றை வழக்கறிஞர் அருள் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
– அருள் வாங்கிய கோடாரியை வைத்து தான், ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டியதும் ஹரிகரன் வாக்குமூலம் தெரிய வந்துள்ளது.
– திட்டத்தை இறுதி செய்து ஜூலை 5 ஆம் தேதி பொன்னை பாலு தலைமையில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
– கைது செய்யப்படும் போது, ஹரிகரனிடம் சாதாரண செல்போன் ஒன்று மட்டுமே இருந்துள்ளது.
– வழக்கறிஞர் ஹரிகரன் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், ஸ்மார்ட் போன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
– கைபற்றப்பட்ட ஸ்மார்ட் போன் மூலமாக ஹரிகரன் ரவுடி சம்போ செந்திலுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.