குடும்பம் நடத்துவதற்கு வர மறுத்த மனைவியை, 30 இடங்களில் கணவன் சராசரியாக வெட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா சன்னங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த 40 வயதான குமார், அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 36 வயதில் அனிதா என்ற மனைவி உள்ளார்.
இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடைபெற்ற நிலையி்ல், 3 மகன்கள் உள்ளனர். குமார் அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவது வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதில், கோபித்துக் கொண்டு அனிதா குப்பங்குளத்தில் உள்ள தந்தை வீட்டுக்குச் சென்றவர், மீண்டும் கணவன் வீட்டுக்கு வரவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த குமார், மனைவியை தேடி குப்பங்குளம் சென்று உள்ளார். அங்கு, அனிதா வயல் வெளியில் விறகு வெட்டிக் கொண்டு இருந்ததை பார்த்து, அனிதாவை வீட்டுக்கு அழைத்து உள்ளார்.
அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே பெரிய வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், கடும் ஆத்திரமடைந்த குமார் மனைவி வைத்திருந்த விறகு வெட்டும் அருவாளை பிடுங்கி, மனைவியை கை, கால் தலை என முப்பதுக்கு மேற்பட்ட இடங்களில் கடுமையாக வெட்டி உள்ளார். இதல், ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உள்ளார். இதில், படுகாயம் அடைந்த அனிதாவை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து மீட்டு, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையில், தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள அனிதாவை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த நாச்சியார்கோவில் சிறப்பு தனிப் பிரிவு உதவி ஆய்வாளர் சிங்காரம் மற்றும் காவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் காவல் துறையினர் சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளி குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.