குடும்ப தகராறில் 2-வது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை சாலிகிராமம் ஜெயபிரகாசன் தெருவை சேர்ந்த 43 வயதான திருமுருகன், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மனைவி இருந்தனர்.
இதில், 2-வது மனைவி புஷ்பா (38), வீட்டு வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், 2 வது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு, அடிக்கடி திருமுருகன் சண்டை இடுவது வழக்கமாக கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலலில் தான், வழக்கம் போல் கணவன் – மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. அப்போது, கணவன் திருமுருகன் கோபித்துக் கொண்டு அருகே உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று உள்ளார்.
அதன் பின்னர், அவரது மனைவி புஷ்பா, திருமுருகனை அழைப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற போது, குடிபோதையில் இருந்த திருமுருகனிடம் மீண்டும் வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது, திடீரென திருமுருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, புஷ்பாவின் கழுத்தில் குத்தி உள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த புஷ்பா, ரத்த காயத்துடன் வீட்டின் அருகே உள்ள கோயிலுக்கு சென்று காப்பாற்றுமாறு வேண்டி உள்ளார். அதன் பிறகு, சாமியிடம் வேண்டி விட்டு, அருகிலேயே மயக்கம் அடைந்து கீழே விழுந்து உள்ளார். இந்த நிலையில், அருகில் இருந்த பொது மக்கள் உடனடியாக மீட்டு கே எம் சி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த புஷ்பா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் கொலை வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இரண்டாவது மனைவியை கொலை செய்ததாக திருமுருகன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.