கணவன் – மனைவி சண்டையில் குழந்தைகளை தந்தையிடம் காட்ட மறுத்த மாமியார் அடம் பிடித்ததால், மனமுடைந்த மருமகன் விபரீதமான முடிவு எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பில் தான், இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு அருகே உள்ள இரட்டை சாலை பகுதியை சேர்ந்த 39 வயதான பாஸ்கர், அந்த பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலைப் பார்த்து வந்தார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 7 வயதில் சபரி என்ற மகனும், 5 வயதில் பிக்சனா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், கணவன் – மனைவிக்குள் ஏற்பட்ட தகராறினால் அவரது மனைவி ரேணுகா, கணவன் பாஸ்கரிடம் சண்டை போட்டுகொண்டு, கோபித்துக் கொண்டு அவரது அம்மா வீட்டுக்கு தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்று உள்ளார்.
இதனையடுத்து, மனைவியை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் மாமியார் விட்டுக்கு சென்ற மருமகன் பாஸ்கரை, வீட்டின் உள்ளே அனுமதிக்காமலும் மற்றும் அவர்களது குழந்தைகளை பார்த்து பேசக் கூட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால், மாமியாரிடம் அந்த மருமகன் எவ்வளவோ கெஞ்சியும் அந்த மாமியார் துளியும் மனம் இறங்கி, குழந்தைகளை காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தனது குழந்தைகளிடம் பேச முடியாத ஏமாற்றத்தினால், மனம் உடைந்த பாஸ்கர் தனது வீட்டிற்கு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பட்டுக்கோட்டை நகர போலீசார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த பாஸ்கர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்வதற்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து பாஸ்கரின் மனைவி மற்றும் மாமியாரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.