Mon. Dec 23rd, 2024

“கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக் கூடாதா?” மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் நடந்தது என்ன?

By Aruvi Apr17,2024

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் “கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக் கூடாதா?” என்று, நீதிபதி அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளார். 

தமிழ்நாட்டில் ஒரு கெட்டப் பழக்கம் இருக்கிறது. திருமணமாகி கணவரை இழந்தவர்கள் எந்த ஒரு சுப காரியத்திலும் முன் வந்து நிற்க கூடாது. அவர்களது கையில் எந்த ஒரு பொருளையும் கொடுத்ருது வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என்று, மிக பழமையான பழக்க வழக்கங்கள் எல்லாம் இன்றளவும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருவது நம் அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாட்டின் இந்த பழக்க வழக்கத்திற்கு நீதிமன்றம் இன்று சவுக்கடி கொடுத்து உள்ளது. 

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பட்டாபிஷேகம் வரும் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

இந்த நிலையில் தான், மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் ஒவ்வொரு நிகழ்விலும், ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படும். அப்போது விழாவின் 8 ஆம் நாள் பட்டாபிஷேக நிகழ்ச்சியில், மீனாட்சியம்மனின் கைகளில் செங்கோல்  ஒப்படைக்கப்படும்.

அந்த செங்கோலை அறங்காவலர் குழு தலைவர் பெற்றுக் கொள்வார். ஆகம விதியின் படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ இந்த செங்கோலை பெற்றுக்கொள்ள கூடாது என்ற விதியை இவர்கள் பின் பற்றுகிறார்கள். 

ஆனால், மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல் ராஜன். அவர் கணவரை இழந்தவர் என்பதால்,  கோயிலின் விதிகளை பின்பற்றி அவரிடம் செங்கோலை வழங்க கூடாது. அதனால், தகுதியான வேறு ஒரு நபரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும்” என்றும், அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில்  கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி,  “இதுபோன்ற மனுவை ஏற்கனவே உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து தள்ளுபடி செய்து உள்ளனர் என்றும்,. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், இதனை அப்படியே தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றும், வாதிட்டார்.

மேலும், “திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது?” என்றும், மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து, இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, “கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோலை வாங்குபவரும் இந்து தானே?. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ள நிலையில், கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது ஏன்?” என்றும், அடுக்கடுக்காக கேள்விகளை நீதிபதி முன் வைத்தார்.

குறிப்பாக, “இந்தக் காலத்திலும் இது போன்ற கருத்துக்களை முன் வைப்பது ஏற்கத்தக்கதல்ல’ என்று பேசிய நீதிபதி சரவணன், அந்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கின் வாதங்கள் மற்றும் நீதிபதி பேசியது, தற்போது வைரலாகி வருகிறது.

By Aruvi

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *