போதிய விடுப்பு இல்லை, 8 மணிநேரம் என்று பிறதுறைகளைப்போன்று பணிநேரம் இல்லை, மணிக்கணக்கில் கால்கடுக்க பந்தோபஸ்து பணி, சமயங்களில் உயிருக்குக் கூட உத்தரவாதம் இல்லாத சூழல்.. தமிழக போலீசாரைப் பற்றி பேசும்போது, இவ்வளவு மனக்குமுறல்கள் இல்லாமல் இல்லை..
ஆனால், என்கவுண்டர் என்று வந்துவிட்டால் எந்த மாநில போலீசாக இருந்தாலும் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. எந்தவொரு பொருளாதார குற்றவாளியாக இருந்தாலும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பந்தபட்ட வழக்காக இருந்தாலும் (லலித் மோடி ஓடலாம், விஜய் மல்லையா ஓடலாம், மெகுல் சோக்சி ஓடலாம்.. தமிழ்நாட்டு உதாரணங்களும் உண்டு.) அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.
ஆனால் பெட்டிக்கேஸ் என்று சொல்லப்படும் சின்னச்சின்னத் திருட்டுகளில் ஈடுபடும் அல்லது அடிதடி வழக்குகளில் கைதாகுபவர்கள் என்று எடுத்துக் கொண்டால் அவர்கள் மிக எளிதாக என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள். கொலைக்குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கு சட்டத்தின்பால் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். ஆனால் பொதுவாக அப்படி நடப்பதில்லை. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி தண்டனை பெற்றுத் தந்திருக்கப்பட வேண்டும். ஆனால் சமூகத்தின் கோவத்தை தணிக்க சட்டென்று மூன்று என்கவுண்டர்கள்.
இப்போது செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநிலக் கொள்ளையன் தப்பிக்க முயன்றபோது சுட்டுக்கொன்றதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கூறுகிறார். 6 பேரிடம் 27 சவரன் நகைகளை பறித்தவன் அவற்றை எடுத்துச் செல்லாமல் தரமணியில் பதுக்கி வைத்துவிட்டு விமானம் ஏறச் செல்வானா?. அந்த நகைகளை எடுத்துக்காட்ட முயலும்போது தாக்குதலில் ஈடுபடுவானா?. இத்தகைய தருணங்களில் தான் போலீசார் மீது நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. ஆளுக்கு தகுந்தாற்போல் நீதியும் மாறுகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
கோடிக்கணக்கிலான ரூபாய் பற்றி எரிகிறது ஒரு நீதிபதி வீட்டில் அவருக்கு பணியிட மாற்றம் என்பது தண்டனை. செயின் பறிப்பு குற்றவாளிக்கு என்கவுண்டர். இரண்டு மாநில பிரச்னை என்று இதனை எளிதில் கூறிவிடலாம். ஆனால் அதிகாரம், பணபலம், கட்சி பலம், சாதி ஆதரவு ஆகியவை பின்புலமாக உள்ள நபர்களுக்கு கிடைக்கும் தண்டனையும், எளிய பின்னணிக் கொண்ட குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனையும் எப்போதும் ஒன்றல்ல.
இந்த இரண்டு ஒப்பீடு மூலம் கிடைக்கப்பெறும் நீதி என்னவாக இருக்கும். தப்பு செய்யுங்கள், தவறு செய்யுங்கள் ஆனால் உங்களை காப்பாற்றிக் கொள்ளும் இடத்தில் இருங்கள். எளியவர்களாக இருந்தால் ஒருநாளும் தவறு செய்யாதீர்கள். அப்படித்தானே.. யார் தவறு செய்தாலும் தண்டனைக் கிடைக்கும் என்ற பொதுநீதி எப்போதும் கிடைக்கும்…
கொசுறு – செத்துப்போனவன் குலாம், சுட்டது புகாரி.. இந்த தகவலை வலிந்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன?..
– க.அரவிந்த்குமார்