“Valiant” என்றால் மனத்துணிவு மிக்க, அச்ச உணர்வற்ற, நெஞ்சுரம் கொண்ட” என்று பொருள் தருகிறது கூகிள். இந்த வார்த்தைகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர், வாழ்பவர் ராஜா தானே. பண்ணப்புரத்திலிருந்து புறப்பட்ட ஒருவரின் இசையை இன்று லண்டனில் உலகின் சிறந்த வாத்திய கலைஞர்கள் வாசிக்கப் போகிறார்கள், அதை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்றால், ராஜாவின் மன உறுதி கொடுத்த வெற்றி தானே இது. ஆகவே இந்த சிம்பொனிக்கு சரியான பெயரையே தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இளையராஜா சிம்பொனி அமைக்க முயற்சி செய்வது இது இரண்டாவது முறை. 1993-ம் ஆண்டு லண்டன் பில்ஹார்மொனிக் ஆர்கெஸ்ட்ராவில் தனது முதல் சிம்பொனியை பதிவு செய்தார் ராஜா. அபீசியலாக பெயர் வைக்கப்படவில்லை என்றாலும் “Fantacy” என்று அந்த சிம்பொனிக்கு பெயர் பரிசீலிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது. லண்டனில் ஜான் ஸ்காட் என்பவர் தான் ராஜாவின் சிம்பொனியை கண்டக்ட் செய்து கொடுத்தார். ஒட்டுமொத்த ஆசியாவிலிருந்து சென்று முதன் முதலில் சிம்பொனி அமைத்தவர் என்ற பெருமை இளையராஜாவுக்கு கிடைத்தது.
சிம்பொனி அமைத்து விட்டு இந்தியா வந்த போது அவருக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் ஆகச்சிறந்த இசைக் கலைஞர்கள் அனைவரும் ராஜாவை சந்தித்து பாராட்டினர். ஏர்போர்ட்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. திரையுலகம் இணைந்து அவருக்கு பாராட்டு விழா நடத்திய போது தான் “மேஸ்ட்ரோ” பட்டம் கொடுக்கப்பட்டது என்று நினைவு.
அதன் பிறகு அந்த சிம்பொனி வெளியிடப்படும் என்று ஆசையோடு காத்திருந்த போதும், அதந்த சிம்பொனி வெளிவரவே இல்லை. ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு ராஜாவுடைய சிம்பொனியின் கண்டக்டராக இருந்த ஜான் ஸ்காட்டிடம் ஈமெயில் மூலம் தொடர்பு கொண்ட ராஜா ரசிகர் ஒருவர், ராஜாவின் சிம்பொனி பற்றி கேட்டார். “மேற்கத்திய விமர்சகர்களின் கருத்துக்களால் இளையராஜா மனம் வருந்தியிருக்கலாம், விமர்சகர்கள் என்ற பெயரில் ஒரு படைப்பாளியை காயப்படுத்திவிட்டார்கள்” என்று பகிர்ந்திருக்கிறார். கண்டிப்பாக இப்படி நடந்திருக்க வாய்ப்புள்ளது.
ராஜாவின் வாழ்க்கையை முழுவதுமாகப் பார்த்தால் அவர் எங்கேயும், எப்போதும் யார் மீதும் குற்றம் சொன்னதே இல்லை. எத்தனையோ அவமானங்களை, புறக்கணிப்புகளை சந்தித்திருந்தாலும், அவை பற்றியெல்லாம் ஒரு வார்த்தை பேசியதில்லை. திரையுலகில் எத்தனையோ ஜாம்பாவான்களுடன் மனக்கசப்போடு பிரிந்த போதும், அதைப் பற்றி விளக்கம் கொடுத்து தன்னை நியாயப்படுத்திக் கொண்டதில்லை. அவரின் மன உறுதி அப்படியானது.
அதே போல் 1993 சிம்பொனி குறித்தும் இன்று வரை இளையராஜா ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.
நகர்ந்து கொண்டே இருக்கும் இந்தப் பிரபஞ்சம், கடந்து போன புள்ளியை மீண்டும் சந்திப்பதில்லை என்று சொல்வார்கள். இந்தப் பிரபஞ்சத்தைப் போன்றவர் ராஜா. கடந்து போனதைப் பற்றி அவர் நினைப்பதே இல்லை. கதம் கதம்..
மொசார்ட், பீத்தோவன் இன்னும் பல ஜாம்பாவன்கள் சிம்பொனி எழுதியிருக்கிறார்கள். அவற்றில் சில சிம்பொனிகளுக்கு ஆண்டுக்கணக்கில் உழைத்திருக்கிறார்கள். ஆனால் நம்மாள் முதல் சிம்பொனியை 14 நாட்களில் எழுதினார். இரண்டாவது சிம்பொனியை 35 நாட்களில் எழுதியிருக்கிறார். இன்னும் வேண்டும் என்றாலும் எழுதுவார். அப்படியிருக்கும் போது கடந்து போனதைப் பற்றி சிந்தித்து நேரத்தை வீணாக்க வேண்டுமா?
இன்று அரங்கேறப்போகும் சிம்பொனி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பாராட்டப்படலாம் அல்லது விமர்சிக்கப்படலாம். அவை எதுவுமே ராஜாவை பாதிக்காது. இசைக்காக படைக்கப்பட்டவர். தன் படைப்பின் ரகசியம் அறிந்தவர் ராஜா. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அவர் பாட்டுக்கு ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கு இசை அமைத்துக் கொண்டிருப்பார்.
அதுதான் ராஜா… இளையராஜா!
தகவல் உதவி : ஸ்வராஜ்யா
– Mahadevan CM