பெண்ணுடன் கள்ளக் காதல் உறவில் இருந்த இளைஞரை பிடித்து சென்று அறையில் பூட்டி வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் 19 வது குறுக்கு தெருவில் வசித்து வந்த நித்தியானந்தம், புரசைவாக்கத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இந்த சூழலில் தான் அதே குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வரும் திருமணமான 26 வயதுடைய பெண்ணுக்கும், நித்தியானந்தத்திற்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவர, அவர் இருவரையும் அழைத்து கடுமையாக கண்டித்து உள்ளார். ஆனாலும், அவர்கள் தங்களது கள்ளக் காதலை விடாமல் தொடர்ந்து உள்ளனர்.
இந்நிலையில், நித்தியானந்தம் புரசைவாக்கம் ரயில்வே குடியிருப்பு வழியாக நடந்து சென்ற போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, நித்தியானந்ததை கடத்தி சென்று ஓட்டேரி செல்லப்பா தெருவில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்துவிட்டு, சரமாரி தாக்கி உள்ளனர்.
அதன் பின்னர், இரவு அந்த கும்பல் நித்தியானந்ததை அழைத்து வந்து விட்டு விட்டு, தப்பிச் சென்றது. இதில், படுகாயமடைந்த நித்தியானந்தம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறிதது நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், நித்தியானந்தம் தகாத உறவில் இருந்து வந்த பெண்ணின் கணவர் 27 வயதான ராபர்ட் ஜான் தான், தனது நண்பர்களுடன் சேர்ந்து நித்தியானந்ததை கடத்திச் சென்று, அறையில் அடைத்து வைத்து தாக்கியது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் தலைமறைவான ராபர்ட் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.
அதே போல் மற்றொரு நிகழ்வாக, அரியலூர் – ஜெயங்கொண்டம் அருகே மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைகாட்டாங் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் 54 வயதான ரவி. கூலி தொழிலாளியான இவர், 35 வயதுடைய மன வளர்ச்சி குன்றிய மாற்று திறனாளி பெண் ஒருவர் ஆடு, மாடு மேய்க்க சென்ற போது, யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி அப்பெண்ணிடம் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்த போது அவர் 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், பெண்ணிடம் கேட்ட போது, சைகை மூலம் நடந்த விஷயங்களை அந்த பெண் கூறியிருக்கிறார்.
அதன் பின்னர், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட ரவியை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.