“ ‘இந்தியன்-2’ படத்தின் மூலம் என்னை தாத்தா என்று தான் அழைக்கிறார்கள். அது பற்றி எனக்கு கவலைப்படவில்லை” என்று, நடிகர் கமல்ஹாசன் மனம் திறந்து பேசி உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் – இயக்குனர் ஷங்கர் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன்-2’ படம், வரும் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு. இன்று ‘இந்தியன்-2’ திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய இயக்குநர் ஷங்கர், “ ‘இந்தியன்-2’ தாத்தா கேரக்டருக்காக ஆர்ட் டைரடக்டர் தோட்டா தரணி வைத்து கெட் அப்பை வரைய சொன்னோன். அதற்கு கமலின் அப்பா, சகோதரர் போட்டோ களை கூட பயன்படுத்தினோம்” என்று, குறிப்பிட்டார்.
அத்துடன், “ ‘இந்தியன்-2’ படம் பார்த்தசென்சார் போர்டு உறுப்பினர்கள், பாராட்டினார்கள். படம் நல்லா வந்து இருக்கிறது. குடும்பத்துடன் பார்க்கலாம் என்று சொன்னார்கள்” என்று, இயக்குனர் ஷங்கர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
“ ‘இந்தியன்-2’ படத்தில், இந்தியன் தாத்தாவுக்கு என்ன வயசு? என கேள்வி வருது. இந்தியன் தாத்தா தியானம், உணவு கட்டுப்பாடு கொண்டவர். அவருக்கு ஏஜ் தடையில்லை என்பது போல பார்க்கணும். கமல் கேரக்டர் என்பது, நம் மனதில் உள்ள கோபம், ஆதங்கம் தான்” என்று, இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், “எல்லா படமும் , பாத்திரமும் சில சிக்கல் களை கொண்டு வரும். அதை மீறி ஜெயிக்கணும். சில தடங்கல் வரும். விபத்து, கோவிட் என பல விஷயங்களை தாண்டி ‘இந்தியன்-2’ படம் வருகிறது. இப்படி எனக்கு எந்த படத்திலும் நடந்ததே இல்லை” என்று, பரபரப்பை கிளப்பினார்.
“கதாசிரியனாக, நடிகனாக எனக்குள் வியப்பை ஏற்படுத்தியது ‘இந்தியன்-2’. வேற்று மொழி வசனங்களை ஒரே ஷாட்டில் பேசியது சந்தோசம்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
“ரசிகர்கள் கருணைக்கு அளவு இல்லை. அவர்களுக்கு பிடித்தால் குழந்தை மாதிரி நடிகரை கொஞ்சுவார்கள். என்னை அப்படி 65 ஆண்டுகளாக நடத்துகிறார்கள்” என்றும், கமல்ஹாசன் பேசினார்.
“ ‘இந்தியன்-2’ படத்தின் மூலம், என்னையும் தாத்தா என்று அழைக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. காந்தியை தாத்தா என்கிறார்கள். பெரியாரை தாத்தா என்று அழைக்கிறார்கள். யெஸ், நானும் தாத்தா தான்!” என்று, நடிகர் கமல்ஹாசன் உணர்ச்சி பொங்க பேசினார்.