TATA ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் 18வது சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், இன்று கோலாகாலமாக நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இந்த சீசனில் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் நடைபெறும் இந்த ஐபிஎல் போட்டிகளுக்கு உலகளவில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் இறுதியில் தொடங்கி ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.
ஐபிஎல் 2025 18-வது சீசனில் மொத்தம் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
‘பி’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
17 சீசனில் கோப்பையை வென்ற அணிகளின் விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் – 5
மும்பை இந்தியன்ஸ் -5
ராஜஸ்தான் ராயல்ஸ் – 1
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – 3
குஜராத் டைட்டன்ஸ் -1
டெக்கான் சார்ஜர்ஸ் -1
சன்ரைசர்ஸ் ஐதரபாத் -1
இதில் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் அதிகபட்சமாக 5 கோப்பைகளை வென்றுள்ளது.
ஐபிஎல் 18 வது கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் 10 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தன. இந்நிலையில்,18வது சீசன் இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு அணியும் தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். நாடு முழுவதும் உள்ள சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட 13 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பாகும் நிலையில், ஜியோ ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
முதல் நாளான இன்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
KKR vs RCB – நேருக்கு நேர்
இரண்டு அணிகளும் 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 20 முறையும், பெங்களூரு அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசி 5 ஆண்டுகளில் விளையாடிய 10 போட்டிகளில் கூட, கொல்கத்தாவே 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது
இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 70% – 90% மழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுவதால், மழையால் இன்று போட்டி பாதிக்கப்படுமோ என ரசிகர்கள் அச்சம் நிலவி வருகிறது.
உத்தேச பிளேயிங் லெவன்:
கொல்கத்தா: குயின்டன் டி காக், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரகானே (கேப்டன்), மனீஷ் பாண்டே, ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், அன்ரிச் நோர்ட்ஜே, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் வைபவ் அரோரா
இம்பேக்ட் பிளேயர்: மயங்க் மார்கண்டே
பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.