“உயிரோடு இல்லை என்றால் அவரின் முகத்தையாவது காட்டுங்கள்” என்று, மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கதறி அழது கோரிக்கை விடுத்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலர் முத்துக்குமாரை கொலை செய்த வழக்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பொன்வண்ணன் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வந்த போலீசார் நேற்று முன்தினம் கம்பம் வனப்பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை பிடிக்க சென்ற போலீசார் தப்பி ஓட முயன்றதாக பொன் வண்ணனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
முதல் கட்டமாக பொன்வண்ணன் என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின் துப்பாக்கியால் சுட்டதில் பொன் வண்ணன் காயம் ஏற்பட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அவரை அழைத்து வந்த நிலையில், அங்கு சிறிது நேரம் சிகிச்சை எடுக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீசார் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், பொன்வண்ணனின் குடும்பத்தினர் அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக அவரை பார்க்கச் சென்றபோது போலீசார் அனுமதிக்காமல் விரட்டியடித்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
“தனது கணவர் பொன்வண்ணனை போலீசார் சுட்டு பிடித்து என்கவுண்டர் செய்ததாக கூறுகின்றனர். பின்னர், அதனை மாற்றி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர். தனது கணவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா, உயிரிழந்து விட்டாரா என்பது குறித்து தங்களிடம் தெரிவிக்காமல் உண்மையை மறைத்து வருவதாகவும்” போலீசார் மீது, பொன்வண்ணனின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தனது கணவரின் நிலை குறித்து தெரியாமல் தனது இரண்டு வயது குழந்தையுடன் தவித்து வருவதாகவும், போலீசார் எந்த வித தகவல்களையும் கொடுக்க மறுக்கின்றனர் என்றும், அவர் உயிரோடு இருக்கிறாரா என்பது கூட தெரியவில்லை. அவர் உயிரிழந்திருந்தால் கூட, அவரது உடலையாவது தங்களிடம் காண்பிக்க வேண்டும் என்று, அவரது மனைவி ரித்திகா மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.