Tue. Jul 1st, 2025

இலங்கை அண்டை நாடா? சண்டை நாடா?

By Joe Mar26,2025 #Fisherman #SriLanka

1974 மற்றும் 1976-ல் இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக பாக் நீரிணையில் உள்ள கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து 10 ஆண்டுகளுக்கு கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், அந்தோணியார் ஆலயத்தில் வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. 1984-க்குப் பிறகு இந்த ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக இலங்கை கடற்படை கைது நடவடிக்கையைத் தொடங்கியது.

அதேகாலக்கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் எழுச்சிப் பெற்ற நிலையில், அவர்கள் மீதான கோவத்தை அப்பாவி மீனவர்கள் மீது திருப்பியது இலங்கை அரசு. விடுதலைப்புலிகளுக்கு உதவுகிறார்கள் என்ற காரணத்தைக் கூறியும், எல்லை தாண்டுகிறார்கள் என்ற பழைய பல்லவியைப் பாடியும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வதும், சிறைபிடிப்பதும் என அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டது.

அதிகாரபூர்வ தகவல்களின்படி, கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் 843 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையில் நடைபெற்று வந்த இறுதிக்கட்டப் போர் முடிந்த சில ஆண்டுகளுக்கு மட்டும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டுப்பட்டு காணப்பட்டது. இடையே இலங்கையில் நடந்த உள்நாட்டு அரசியல் கலவர காலத்தில் சிறிது குறைந்திருந்தது. (மகிந்த ராஜபக்சே விரட்டப்பட்ட காலம்) அனுரகுமார திசநாயகே தலைமையில் ஆட்சி அமைந்த பிறகாவது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறையும் என்று எதிர்பார்த்தால் முன்னைவிட அதிகரித்தே உள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2020 மற்றும் 2024 இடையிலான காலகட்டத்தில் மொத்தம் 1,194 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 202-ல் 74 பேர், 2021-ல் 143 பேர், 2022-ல் 229 பேர், 2023-ல் 220 பேர் மற்றும் 2024-ல் 528 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் நாளது தேதிவரை 100-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்படியே போனால் ராமேஸ்வரம், நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் எப்படி தொழில் செய்ய முடியும். இதைவிடக்கொடுமை, பாஜகவைச் சேர்ந்த சுப்ரமணிய சுவாமி கொடுத்த மிக மோசமான யோசனையை இலங்கை அரசு பின்பற்றத் தொடங்கியது தான். அதாவது விசைப்படகு, வலை இருந்தால் தானே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வருவார்கள். கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுதலை செய்தாலும், அவர்களுடைய விசைப்படகுகளை பறிமுதல் செய்து ஏலம் விடுங்கள். இதன்மூலம் அடுத்தமுறை தமிழக மீனவர்கள் கடலுக்கு வரமுடியாது அல்லவா என்பதுதான் அவர் கொடுத்த யோசனை. கடந்த சில ஆண்டுகளாக இதனை இலங்கை அரசு மிகத்தீவிரமாக பின்பற்றி வருகிறது.

ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது, தமிழ்நாட்டை யார் ஆண்டாலும் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகின்றனர். அதன்பிறகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசுகிறது. அப்போதைக்கு கைதானவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனாலும் கைது நடவடிக்கை நின்றபாடில்லை. ஒரு மாநில அரசால் கூக்குரல் மட்டும் தான் எழுப்ப முடியுமே தவிர, நிரந்தர தீர்வை இரண்டு நாடுகளும் தான் இணைந்து எடுக்க முடியும்.

ஆனால் அவ்வாறான நிரந்தர தீர்வு எட்டப்படாத நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவ சங்கங்கள் ஒன்றிணைந்து 6 பேர் கொண்ட குழுவாக (25-03-25) இலங்கைக்கு செல்கின்றனர். அங்கு சிறையில் வாடும் மீனவர்களுக்கு ஆறுதல் சொல்ல உள்ளனர். பின்னர் மன்னார், யாழ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை சந்தித்து பேச உள்ளனர். நாட்டால் வேறுபட்டிருந்தாலும், தொழிலால் நாம் மீனவர்கள் தானே நமக்குள் ஏன் பேதம் என்று அவர்களிடம் முறையிட உள்ளனர். பின்னர் இலங்கை கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை சந்தித்து பேச உள்ளனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் மத்திய, மாநில அரசுகளிடம் போராடி நிரந்தர தீர்வு எட்டப்படாத நிலையில், தங்கள் பிரச்னையை தாங்களே தீர்த்துக் கொள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளது கவலை அளிக்கிறது.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பதும், இந்திய ரோந்து படையை சர்வதேச கடல் எல்லையில் நிறுத்துவது மட்டுமே தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளியாக இருக்க முடியும்.

விவசாயிகள், தொழிலாளர்கள் என நிலத்தில் எந்தவொரு பிரிவினருக்கு சோதனை ஏற்பட்டாலும் அது பேசுபொருளாகிறது. உடனடி தீர்வும் கிடைக்கிறது. ஆனால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரைக் கொடுத்தும், சிறைபட்டும், வாழ்வாதாரத்தை இழந்தும் தவிக்கும் தென்தமிழக மீனவர்களின் வாழ்க்கைக்கு சமவெளி சமூகமும் குரல்கொடுத்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கரம் கோர்க்க வேண்டும்.

 

– க.அரவிந்த்குமார்

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *