வெளிநாடுகளுக்கு சென்று வரும் பொது மக்கள் அணிந்து சென்று வரும் நகைகளுக்கும் சுங்க வரி விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன? இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
சமீபத்தில் தமிழகத்தில் இருந்து வெளிநாடு சென்று விட்டு, சென்னை திரும்பிய பெண் ஒருவர், 135 கிராம் எடையுள்ள 10 வளையல்கள் அணிந்து வந்ததாகக் கூறி, அவற்றை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர் வரி விதித்தனர்.
அதே போல், இலங்கையில் இருந்து வந்த பெண் ஒருவர், 88 கிராம் தாலிச் சங்கிலி அணிந்திருந்ததாகக் கூறி, அதனையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து வரி விதித்தனர்.
இப்படி பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை திரும்பத்தரக் கோரி பாதிக்கப்பட்ட பெண்கள், நீதிமன்றத்தை நாடினார். இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “வெளிநாடு சென்று விட்டு திரும்புவோர், அவர்கள் உடலில் அணிந்திருக்கும் நகைகளை உடமைகளாக கருதி, சுங்கவரி விதிக்க முடியாது என்று கூறி, நகைக்ளை திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என்று, அதிரடியாக உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சுங்கத் துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சி.சரவணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுங்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “50 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு மேல் கொண்டு வரப்படும் பொருட்கள், உடைமைகளாக கருதப்பட்டு வரி வசூலிக்கப்பட வேண்டும்” என்று, வலியுறுத்தினார்.
அத்துடன், “உடலில் அணிந்து உள்ள நகைகளை உடைமைகளாக கருத முடியாது என்ற உத்தரவை ஏற்றுக் கொண்டால், அது இந்திய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று, வாதாடினார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “உடலில் அணிந்து வரும் நகைகளை சுங்க வரி விதிக்கும் வகையில் உடைமைகளாக கருத முடியாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு நிபந்தனையுடன் தடை விதித்து” அதிரடியாக உத்தரவிட்டனர்.
மேலும், “பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை, பிணை அல்லது உத்தரவாதம் பெற்று திரும்ப வழங்க வேண்டும்” என்றும், நீதிபதிகள் நிபந்தனை விதித்து உள்ளனர். இதனால், வெளிநாடுகளுக்கு சென்று வரும் பொது மக்கள் அணிந்து சென்று வரும் நகைகளுக்கும் சுங்க வரி விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளதால், பொது மக்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்து உள்ளனர்.