“நான் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாகவும், எனக்கும் எனது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நான் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறப்படும் தகவல் தவறான தகவல்” என்று, பின்னணி பாடகர் கல்பனா ராகவேந்தர் பேசி உள்ளது வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பின்னணி பாடகி கல்பனா ஐதராபாத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்பட்ட நிலையில், நடந்த சம்பவம் குறித்து பாடகி கல்பனா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய பின்னணி பாடகர் கல்பனா, “யூடியூபில் காரசாரமாக கல்பனா தற்கொலைக்கு முயற்சி செய்தார் எனவும், கல்பனாவின் கணவர் தான் தற்கொலைக்கு காரணம் எனவும் கூறப்பட்டது. ஆனால், கடந்த மூன்று நாட்களாக எனக்கு பல புகழ் கிடைத்துள்ளது. 38 வருடங்களாக கடுமையாக பாடிய புகழை விட, கடந்த மூன்று நாட்களாக பெரிய புகழ் கிடைத்து உள்ளது. என்னுடைய விவகாரத்தில் மீடியா கையாலும் விவகாரம் சரியானது அல்ல. நான் தற்கொலை செய்ய முயற்சி செய்யவில்லை.
என்னுடைய உடலில் பல பிரச்னைகள் உள்ளது. நமது நல்ல விஷயம் பத்து பேருக்கு சென்றால், தவறான செய்தி பல பேருக்கு செல்லும் மோசமான நிலையில் தமது சமுதாயம் உள்ளது. எனது கஷ்டங்களையும், வேதனையையும் கூறவே இந்த செய்தியாளர் சந்திப்பு.
எனக்கும் எனது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையாலே தற்கொலை செய்து கொண்டேன் என கூறப்பட்டது. ஆனால், அது உண்மை அல்ல. நான் இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஜனவரி மாதத்தில் இருந்தே எனக்கு உடலில் பிரச்சனை உள்ளது. இருமல் நெஞ்சுவலியோடு தான் ஐந்து பாடல் நிகழ்ச்சிகளை முடித்தேன். எனக்கு தூக்கம் இன்மை பிரச்சனை உள்ளது. என்ன தான் மைக்கை பிடித்து பாடல் பாடினாலும், நானும் சாதாரண பெண்தான். தற்கொலை செய்து கொண்டேன் என மீடியா திரித்து போட்டு உள்ளார்கள். எனது வாழ்விலே பிரசாத் பிரபாகர் மாதிரி ஒரு கணவர் கிடைத்தது தான் பாக்கியம். அவர் இல்லை என்றால், என்னால் இன்று உயிர் பிழைத்திருக்க முடியாது. என் அப்பா, என் குரு இன்று உயிரோடு இல்லை. அத்தனை பேரையும் சேர்த்து வைத்து உயிரோடு இருப்பவர் எனது கணவர் மட்டும் தான். எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பிரச்சனை என கூறப்பட்டது, அதுவும் உண்மை அல்ல.
சாதாரண பிரச்சனை தான் எனக்கும் எனது மகளுக்கும் ஏற்பட்ட பிரச்சனை.
நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று ஹெவி டோசெஜ் மருந்துகளை எடுத்துக் கொண்டேன். ஹெவி டோசெஜ் எடுத்த காரணத்தாலேயே, நான் நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்தேன். அப்போது அருகில் இருந்த எனது கணவர் தான், மருத்துவமனைக்கும் போலீஸ்க்கும் கால் செய்து என்னை காப்பாற்ற கூறினார். இதை சாப்பிட்டேன், அதை சாப்பிட்டேன் என ஏன் எங்களைப் போன்றவர்கள் மீது சேற்றி வாரி அடிக்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் எத்தனையோ குற்றங்கள் அரங்கேறி வருகிறது. எட்டு வயது குழந்தை, ஐந்து வயது குழந்தைகளுக்கு எல்லாம் பாலியல் எதிரான சம்பவங்கள் நடந்து வருகிறது. அதெல்லாம் மீடியாக்களுக்கு தெரியவில்லையா?
எனக்கு இதுதான் நடந்தது என யாரும் கூறாமல் நீங்களா கூறுவது எப்படி? என்னை பற்றி எதுவும் தெரியாதவர்கள் நான்கு சுவர்களுக்குள் நடந்தது எப்படி தெரிய வந்திருக்கும்?
குழந்தையிலிருந்து, 40 வருடங்களாக நான் பாடி வருகிறேன். நான் தற்கொலை செய்து கொண்டேனா? என என்னிடமோ அல்லது என்னை சார்ந்தவர்களிடமோ எதுவும் கேட்காமல் நான் தற்கொலைக்கு முயன்றேன் என செய்திகளை போட வேண்டாம். மக்கள் நல்ல விஷயங்களை கேளுங்கள். எனக்கு ஹிந்தி புரியும், தமிழ் தெரியும், தெலுங்கு தெரியும், மலையாளம் தெரியும். இந்த நான்கு மொழிகளையும் வைத்து தான் எனது LLb கல்வி தொடர்பான யூட்யூப் பக்கங்களை பார்த்து தான் எனது எல்எல்பி தேர்வை முடித்தேன்.
சமுதாயத்தில் தொடரும் அவல நிலை மாறவில்லை என்றால், இந்த உலகம் நெகட்டிவ் பற்றி மட்டுமே பேசும். சமுதாயமாக மாறும். பலரின் நேர்மை வரலாறு மறைக்கப்படும். நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் கூட, மீடியாக்களை பார்த்து வேண்டாம் என நினைக்க கூடிய அவலம் வரும். இத்தனை பொய்களுக்குப் பிறகும் எனது குடும்பமும் எனது உறவினர்களும் தான் எனக்கு பின்னால் உறுதுணையாக நிற்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் வரப்பட்ட நிலையில் எப்படி பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறித்து நம் அனைவருக்கும் தெரியும். அந்த பெண்ணுடைய விவரங்களையும் அனைவரும் ஃபார்வேர்ட் செய்தார்கள்,
நாட்டில் 100 ரேப் நடந்தால், 10 மட்டுமே காவல்துறைக்கு தெரிய வருகிறது. அதில் ஒன்று மட்டுமே உயர் நீதிமன்றம் வரை சென்று தண்டனை பெறப்படும் சூழல் உள்ளது. தவறான தகவல்களை பரப்புவோர் மீது தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடமும் காவல் துறையிடமும் இன்று புகார் கொடுத்துள்ளேன். தெலுங்கானா மற்றும் கேரளாவிலும் நாளை புகார் கொடுக்க உள்ளேன்.
நமது குழந்தைகள் எண்ணங்களில் தவறான தகவல்களும், வீடியோக்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தவறான தகவல்களை மீடியாக்களில் பரப்புவோர் மீது தகுந்த தண்டனை வழங்க நல்ல சட்டத்தை கொண்டு வர தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை வைப்பதாகவும்” பாடகி கல்பனா பேசினார்.