உலக பிரசித்தி பெற்ற திருப்பாம்புரம் ராகு கேது கோவிலில், இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் மேற்கொண்டார். ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட திருப்பாம்புரம் பகுதியில் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு கேது பகவானுக்கு சன்னதி அமைந்து உள்ளது.
இங்குள்ள கோவிலில், ராகுவும் கேதுவும் ஏக சரீரமாக இறைவனை இதயத்தில் வைத்து பூஜை செய்து வரும் தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் சிறப்புமிக்க கோவிலாக விளங்கி வருகிறது.
இவ்வாறு சிறப்பு மிக்க இந்த கோவிலில் இன்று இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கோவிலுக்கு வருகை புரிந்தார். அப்போது, கோவில் நிர்வாக மேலாளர் வள்ளிகந்தன் மற்றும் கோவில் தலைமை சிவாச்சாரியார் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, விநாயகரை வழிபாடு செய்த இளையராஜா, தொடர்ந்து மூலவரான அருள்மிகு சேசபுரீஸ்வரர் வண்டுசேர்பூங்குழலி ஆகிய சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.
அதனை தொடர்ந்து, ராகு கேது பகவான் சன்னதிக்கு சென்று இசைஞானி இளையராஜா அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், வெளியில் வந்த இளையராஜாவை பொது மக்கள் கூட்டமாக நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
அத்துடன், கோவில் அலுவலகத்திற்குச் சென்ற பொழுது கோவிலில் ஊழியர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதனிடையே, உலக பிரசித்தி பெற்ற திருப்பாம்புரம் ராகு கேது கோவிலில், இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் மேற்கொண்டது, அந்த கோயிலைப் பற்றி பலரும் இணையத்தில் தேடத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.