கள்ளக்குறிச்சி ரசாயனம் கலந்த சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் எந்த ஆட்சி நடைபெற்றாலும் கலாச்சாராய சாவுகள் தொடர் கதையாக நடைபெற்று வருகிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதே நேரத்தில், விஷ சாராய மரணத்தில் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்ப்பட்ட கள்ளச்சாரய மரணம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், அரசு முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர், டிஜிபி, மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.
அதே நேரத்தில், சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், உயர் நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை மற்றும் கள்ளக்குறிச்சியை சார்ந்த நபர் சார்பில் வழக்கறிஞர் டி.செல்வம் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
குறிப்பாக, கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்த உயிரிழந்த வழக்கில் விசாரணையானது, தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பிடு வழங்கப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.