நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில், தனது அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி, சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு ஆகியோர் கனிமொழி கருணாநிதியைச் சந்தித்து வெற்றி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு அளித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
“இந்த வெற்றிக்காக உழைத்த பிரச்சாரம் செய்த அனைத்து தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மீண்டும் என் மீது இந்த அளவிற்கு நம்பிக்கையை வைத்து வாய்ப்பை உருவாக்கி தந்திருக்க கூடிய தூத்துக்குடி மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், கூறினா்.
அத்துடன், “தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமே இல்லை, தமிழ்நாட்டில் தாமரை மலராது என்று மிகத் தெளிவாக மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர், நிறைய பேர் கனவோடு இருந்தனர் அந்த கனவு தற்போது தெளிவாகப்பட்டுள்ளது.
அண்ணாமலை என்னை பார்த்து அடிக்கடி ஒரு கேள்வி கேட்பார் கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று, இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக அவருக்கு நான் பதில் சொல்கிறேன் அந்த தகுதியை கூட இல்லாத ஒருவர் தமிழ்நாட்டின் பாஜகவின் தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நிச்சயமாக நல்லது கிடையாது….
அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுக்காக மக்கள் அவர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனர் என்று கூறினார். பாஜகவின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும்” என்றும், கனிமொழி வலியுறுத்தினார்.
இதனையடுத்து, வடு திரும்பிய கனிமொழி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில், தனது அம்மாவிடம் காண்பித்து பெரிதும் மகிழ்ந்தார்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற கனிமொழி, நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதையடுத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.