“ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டை அவமதிக்கும் போக்கை பாஜக அமைச்சர்கள் பின்பற்றுகிறார்கள்” என்று, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டின் கல்வி தரம் கொரோனாவிற்கு பிறகு பின் குறைந்திருப்பதாக” சுட்டிக்காட்டி பேசினார்.
குறிப்பாக, “மூன்றாம் வகுப்பு மாணவர்களால் ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தை படிக்க முடியவில்லை” என்றும், பேசியுள்ளார். இதற்கு, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இதேபோல், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை கல்வித் தரத்தை குறித்தும் குறைகூறியும்” பேசியுள்ளார். இதனால், அம்மாநில எம்.பி.க்களும் அவரது பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி., “பாஜக அரசு, தினமும் தமிழ்நாட்டையும், எதிர்க்கட்சியினையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது. இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் இழிவுபடுத்தப்பட்டார். நேற்று (மார்ச்.10) ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டை அவமதித்தார்.
அதே போல், “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டையும் முதலமைச்சரையும் அவமதித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டிற்குத் திட்டங்களை வழங்குவதன் மூலம் ஏதோ தொண்டு செய்வது போல் காட்டுகிறார்கள். ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டை அவமதிக்கும் போக்கை பாஜக அமைச்சர்கள் பின்பற்றுகிறார்கள்.
ஒவ்வொரு நாளும், ஒன்றிய அரசு தங்களின் அமைச்சர்கள் மூலம், வெவ்வேறு மாநில மக்களை இழிவு செய்வதைப் பார்க்கிறோம். குறிப்பாக, பாஜக ஆளாத மாநில மக்களை இழிவு செய்கிறார்கள். இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது” என்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தி.மு.க எம்.பி. கனிமொழி கருணாநிதி கூறியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.