இன்றைய நவீன காலக்கட்டத்தில் நம்மில் பெரும்பாலானோர் இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதையும், காலையில் தாமதமாக எழுவதையும் பழக்கமாகவே கொண்டிருக்கின்றனர். இந்த நிலைக்கு இன்றைய உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை தான் முக்கிய காரணம். கடினமான பணிகளில் ஈடுபடுபவர்கள் நாள் முழுக்க உடலுக்கு அதிகப்படியான வேலை கொடுப்பதால், இரவில் அவர்களுக்கு சீக்கிரமாகவே தூக்கம் வந்துவிடுகிறது.
ஆனால், தற்போது பெரும்பாலானோர் கணினியில் தான் வேலை செய்கிறார்கள். இதற்கிடையில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் அதிகமாக இருக்கிறது. இவை அனைத்தும் அவர்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு மனிதன் இரவில் சராசரியாக 7-8 மணிநேரம் தூங்காமல் இருப்பதால், உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மனநல கோளாறுகள்
இரவில் லேட்டாக தூங்குவர்களுக்கு மெலடோனின் ஹார்மோன்களின் உற்பத்தி (ஹாப்பி ஹார்மோன்) குறைந்துக் கொண்டே வரும். இதனால், மன அழுத்தம், மனச் சோர்வு, கவலை, எரிச்சல், பதட்டம் போன்றவற்றை அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்க நேரிடலாம். மேலும், தீவிர மற்றும் நீண்ட கால தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் கவனச்சிதறல், மாயத்தோற்றம், குழப்பம், சித்தபிரம்மை போன்ற மனநல பாதிப்புகளுக்கு ஆளாகலாம்.
நினைவாற்றல் இழப்பு
மூளைக்கு தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்ள நேரம் கொடுப்பதற்கும், நினைவாற்றை மீட்டெடுப்பதற்கும் தூக்கம் மிகவும் அவசியமானது. ஆனால், இரவில் லேட்டாக தூங்குவதால் இந்த செயல்களில் பாதிப்பு ஏற்படலாம். இதனால், பிற்காலத்தில் நினைவாற்றல் இழப்பு ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.
கருவுறுதலில் பிரச்சனை
இரவில் லேட்டாக தூங்குவதால் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் அண்டவிடுப்பைத் தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தி அளவு குறைகிறது. இது கருத்தரிக்க முயற்சிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரச்சனையை உண்டாக்கலாம். அதுமட்டுமல்லாமல், இரவில் வெகுநேரம் விழித்திருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நாள்பட்ட நோய் பாதிப்பு
தினமும் இரவில் தாமதமாக தூங்குவது உயர் இரத்தம் அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய் பாதிப்புகளை உண்டாக்கும். மேலும், தினமும் 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு எலும்புகள் பலமிழந்து காணப்படும். சீரற்ற தூக்கம் லெப்டின் ஹார்மோன் (பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்) அளவை குறைக்கிறது.
அதேசமயம் கிரெலின் ஹார்மோன் (பசியை உண்டாக்கும் ஹார்மோன்) அளவை அதிகரிக்கிறது. இதனால், எவ்வளவு சாப்பிட்டாலும் வெகு சீக்கிரமே மீண்டும் அதிகமாக பசி எடுக்கும். அதை ஈடுகட்ட ஏதாவது நொறுக்கு தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்போது, அதுமோசமான எடை அதிகரிப்பை உண்டாக்கம். உடல் எடை அதிகமாக இருப்பது பல வியாதிகளுக்கு தீனி போட்டது போல தான்.
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாதல்
தாமதமாக தூங்கும் இளைஞர்கள், நேரமாக தூங்கச் செல்லும் இளைஞர்களை விட மனக்கிளர்ச்சியுடன் இருப்பார்கள். இதனால் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களுக்கு எளிதில் ஆளாகலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆயுள் குறையும்
போதிய அளவு தூங்காதவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் எளிதில் ஏற்படும். இதனால், இளம் வயதிலேயே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஃபோனில் இன்னைக்கு பார்த்த செய்திகளை நாளை பார்க்கலாம். ஆனால், உயிர் போனால் மீண்டும் வராது. எனவே, இனியாவது தினமும் சீக்கிரமாக உறங்கி, சீக்கிரமாக எழுகிற பழக்கத்தை வழக்கப்படுத்துக் கொள்ளுங்கள்.