Mon. Dec 23rd, 2024

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பல்வேறு தலைவர்களும் இரங்கள் தெரிவித்து உள்ளனர். எந்தெந்த தலைவர்கள் என்னென் செய்தியை இரங்கள் செய்தியில் தெரிவித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

 

மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

விஜய், தலைவர், , தமிழக வெற்றி கழகம்.

“பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்!

கூலிப்படைகளை கும்பலை கொலைகார கும்பலை அடையாளம் கண்டு அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அரசுக்கு மேலும் இதனால் களங்கம் ஏற்படும். கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சரணடைந்து இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை , அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

 

செல்வப்பெருந்தகை, காங்கிரஸ், தமிழ் மாநிலத் தலைவர்

திட்டமிட்ட படுகொலை செய்திருக்கிறார்கள் இதை காங்கிரஸ் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த படுகொலை சம்பந்தமாக பேசியிருக்கிறார்கள். குற்றவாளிகள் யார் எங்கு இருக்கிறார்கள் என்பதை இதற்கு பின் ஆராய வேண்டும். அரசு அவருக்கு தேவையான விஷயங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும்.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரை அடக்கம் செய்வதற்கு அனைவரும் விரும்புகிறார்கள். அதே போன்று நானும் விரும்புகிறேன் காங்கிரஸ் பேரியக்கமும் விரும்புகிறது. எனவே அரசு அனுமதிக்க வேண்டும். எப்படி விஜயகாந்துக்கு அவரு க்கு கட்சியின் அலுவலகத்திலேயே அனுமதி வழங்கினார்களோ அதே போன்று தற்போது வழங்க வேண்டும். குற்றவாளிகள்அரசியல் பின்புலம் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

 

அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், இன்று மாலை கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் பொதுவாழ்க்கைக்கு வந்த நாளில் இருந்தே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடுமையாக உழைத்தவர். ஒடுக்கப்பட்ட, உழைக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான பொருளாதாரம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தவர். அவரால் கல்வி கற்று, சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளமாகும்.

 

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றால் திமுக ஆட்சியில் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? ஏற்கனவே சேலம் மற்றும் கடலூரில் அதிமுக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.

 

 

கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

 

தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் ஆளுநர்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை கண்டனத்துக்குரியது. அரசியல் படுகொலைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக வினர்ச் கொலை, விசிக வினர் படுகொலை தற்போது ஒரு தேசிய கட்சியினுடைய மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *