காரைக்குடியில் தனியார் பேக்கரி நிறுவனத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாலிக் கயிறுடன் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் காதலர்களை ரோசாப்பூ கொடுத்து வரவேற்பு அளித்த அந்த பேக்கரி நிர்வாகத்தினர், கடைக்கு வரும் காதலர்களுக்கு ஆஃபர் அளித்து உள்ளதாகவும் சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில் தாலிக் கயிறுடன் காதலர் தின ஆஃபர் அறிவித்த தனியார் பேக்கரி நிறுவனத்திற்கு வந்து, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அங்கு இருந்த காதல் ஜோடிகள் தெறித்து ஓடியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைத்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார், பேக்கரி நிறுவனம்ஆஃபர்களை கேன்சல் செய்து விட்டதாக கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அத்துடன், ஆஃபர் விளம்பர பலகையையும் கடையின் நிறுவனத்தினர் அகற்றினர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், தனியார் பேக்கரி நிறுனம் முன்பு தாலி கயிறுடன் இந்து முன்னணியினர் வந்ததா அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதே போல், காதலர் தினத்தில் கேக் வெட்டி கொண்டாடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் கோவையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கோவை வ.உ.சி. மைதானத்தில் காதலர் தினம் கொண்டாட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையினரின் அனுமதியின்றி, கேக் வெட்டி காதலர் தினம் கொண்டாட முயன்றதால், அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அவர்கள் காவல் வாகனத்தில் ஏற்றப்படும் போது காவல் துறையினருடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.