இந்தியாவெங்கும் இன உணர்ச்சிகள் வீச்சுப் பெற்றிருக்கும் காலம் இது! ஒடுக்குவோரிடம் இருந்துவந்த இன உணர்ச்சி இப்போது ஒடுக்கப்பட்டோரிடம் வேர்விட்டு, விழுதுகள் விட்டு வளர்ந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024-இல் இதைப் பார்த்தோம்!” என்று, தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “இந்திய ஏகாதிபத்திய இனவாதத்தால் பாதிக்கப்பட்ட இனங்கள், திமிறி எழுகின்றன. இன உரிமை மீட்பு முழக்கங்கள் எழுப்புகின்றன! தன்மொழி, தன் தாயகம், தன் இனம் என்று வெளிப்படையாகப் பேசுகின்றன.
எப்பொழுதும் தமிழ்நாட்டில் தமிழ் இனம், தமிழ்மொழி, தமிழர் தாயகம் என்ற முழக்கங்கள் தெள்ளத் தெளிவாக வெளிவராமல் இனக்குழப்பம் செய்யும் திராவிட இருபிறப்பாளர்கள் இப்போதும் திராவிட மாடல் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்.
இந்திய ஏகாதிபத்திய வாதிகள், பாரத்தீயன் (இந்தியன்) என்று ஓர் இனம் இருப்பதாக புராணக்கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். இந்திய அரசமைப்புச்சட்டம் “இந்தியன்” என்ற பெயரிலோ அல்லது பாரத்தீயன் என்ற பெயரிலோ ஓர் இனம் இருப்பதாகக் கூறவில்லை. இந்தியக் குடிமகன் (Citizen of India) என்று மட்டும்தான் பேசுகிறது.
ஆரியத்தின் பாரத்தீயன் கட்டுக் கதைகளுக்குச் சற்றும் குறையாதது, திராவிடத்தின் “திராவிடன்” கட்டுக்கதை! பாரத்தீயனின் இளைய பங்காளி திராவிடன்! இவ்விரண்டும் தமிழன் என்ற இயற்கையான இனத்தை மறைப்பதில், மடைமாற்றுவதில் போட்டி போடும்! அவை இரண்டும் (பாரத்தீயன், திராவிடன்) ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள்! கற்பனைக் கதா பாத்திரங்கள்! இயற்கையான தமிழ் இனத்தைச் சிதைக்கும் கருத்தியல் வில்லன்கள்!
இந்தியாவில் வேறு எந்த இனத்திற்கும் தமிழர்களுக்கு வந்து வாய்த்ததைப்போல் இரட்டை வில்லன்கள் இல்லை. இந்திய ஏகாதிபத்தியவாதம், அதை எதிர்த்த இயற்கையான சொந்த இனவாதம், என இருமுகாம்கள் மட்டுமே மற்ற மாநிலங்களில் இருக்கும். தமிழ்நாட்டில், இந்திய ஏகாதிபத்திய வாதத்தை எதிர்ப்பது போல் போலிக்குரல் கொடுத்துவிட்டு, இந்திய ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாய்ச் செயல்படும் அயல் இனவாதமான “திராவிட” இனவாதம் செழித்துப் படர்ந்துள்ளது.
கல் (மலை) தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய உலகின் மூத்த குடிகளைக் கொண்ட தமிழ் இனம் மாற்றுக் குறைந்தது, ஆரியக் கலப்புள்ளது என்று வஞ்சகர்கள் திரித்துப்பேசி, தங்களுக்கு உகந்தவாறு புனையப்பட்ட திராவிட இனத்தைத் திணித்தார்கள்! இந்தத் திராவிட அநீதி அந்த வஞ்சகர்கள் சொந்தம் கொண்டாடும் ஆந்திரப் பிரதேசத்தில், தெலுங்கானாவில், கர்நாடகத்தில், கேரளத்தில் உண்டா? இல்லவே இல்லை! இவர்களிடம் ஏமாந்தவர்கள், இவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டுமே!
என் அன்புத் தமிழர்களே, இங்கு ஏன் இவ்வளவு மனவலியோடு இதைச் சுட்டிக் காட்டுகிறேன்?
இந்தியாவெங்கும் உத்திரப்பிரதேசம் உட்பட அவரவர் சொந்த இன எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. நரேந்திர மோடி, அமித்சா வகையாறாவின் குசராத்தி ஆதிக்கம் உத்திரப்பிரதேசத்தில் கூடாது என்று உத்திரப்பிரதேச இந்திக்காரர்களிடையே அவர்களின் பாசக கட்சிக்குள்ளேயேஇன எழுச்சி ஏற்பட்டிருக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் சொந்தத் தமிழ் இன எழுச்சியை மடைமாற்றும் திராவிடம் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் மாநிலத் தன்னாட்சி வேண்டும் என்ற உரிமைக் குரல் ஓங்கி வருகிறது. காங்கிரசு மற்றும் பாசக தலைமை என்பது இந்திய ஏகாதிபத்தியத்தின் இன அரசியல் தலைமைகள்! இவற்றில் ஒன்றுடன் கூட்டணி வைப்பது இந்திய ஏகாதிபத்திய வாதத்தை மேலும் வளர்க்கும், மேலும் உறுதிப்படுத்தும் செயலாகவே முடியும்.
1970களில் இருந்து தன்னாட்சி உரிமை கோரிய திமுக, ஒன்றிய அரசு-மாநில அரசுக்கிடையே மறு அதிகாரப் பகிர்வுக்கு இராசமன்னார் குழு அமைத்து, அதன் ஆய்வறிக்கையைப் பெற்று, அதை 1970 களிலேயே தமிழ்நாடு சட்டப்பேரவையிலும், தமிழ்நாடு சட்ட மேலவையிலும் (MLC அவை) நிறைவேற்றி, இந்திய அரசுக்கு அனுப்பி அதைச் செயல்படுத்தக் கோரியது! அதில் ஒரு உரிமையையாவது மீட்டதா? இல்லை! ஆளும் காங்கிரசுடன், பாசகவுடன் எனப்பல ஆண்டுகள் இந்தியாவின் கூட்டணி ஆட்சிகளில் அமைச்சர் பதவிகள் வகித்த திமுக, புதிதுபுதிதாக மாநில உரிமைகளைப் பறிகொடுப்பதற்குத்தான் பக்கத் துணையாக இருந்தது. எப்போதாவது குறைந்த்து ஓர் உரிமையையாவது மீட்டதுண்டா? இல்லை!
எனவேதான் காங்கிரசுடன், அல்லது பாசகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்குத் தன்னாட்சி பெறுவோம் என்று அவ்வப்போது திமுக பேசுவது இன உணர்ச்சிமிக்க தமிழர்களை ஏமாற்றி இழுத்துக் கொள்ளும் சூழ்ச்சி தவிர வேறல்ல!” என்று, தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் தெரிவித்து உள்ளார்.