“சமூக வலைதளத்தில் என்னை பற்றி ஆபாசமாக பேசி வருபவர்கள் ரேப்பிஸ்ட் தான்” என்று, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திலகவதி ஆவேசமாக பேசி உள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் பட்டினப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலா் ராஜ்குமாா், கடந்த புதன் கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு மணற்பரப்பில் பேசிக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடமும், இளம் பெண்ணிடமும் “நீங்கள் கணவன் – மனைவியா?” என்று, அந்த போலீசார் விசாரித்து உள்ளார். இதனால், அந்த காவலருக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடா்பான வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வைரலானது. இது குறித்து தகவலறிந்த சென்னை காவல் துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தினார். இதனையடுத்து, காவலா் ராஜ்குமாரை பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அத்துடன், இந்த வீடியோ குறித்தும் அந்த பெண் குறித்தும் சமூக வலைதளங்களில் ஆதரவும் – எதிர்ப்பும் ஒரு சேர சேர்ந்து கிளம்பியிருக்கிறது.
இதனையடுத்து, அந்த பெண் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திலகவதி என்பது தெரிந்தது. இது குறித்து, எதிர்ப்பு தெரிவித்து பலர் கருத்துக்களை பதிவு செய்தது பதலடி கொடுக்கும் வகையில் திலகவதி விளக்கம் தெரிவித்து காட்டமான பதிலையும் புதிய வீடியோவில் பேசி வெளியிட்டார்.
அதன் தொர்ச்சியாக, சென்னை மெரீனா கடற்கரையில் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் திலகவதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், “என்னை பற்றி சமூக வலைதளங்களில் பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த திலகவதி, “பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் நானும் நண்பரும் அமர்ந்து இருந்த போது காவலர் ஒருவர் தங்களை தவறான நோக்கில் கேள்வி கேட்டார். அதற்கு தான் பதில் அளித்தேன். என்னுடைய அடையாள அட்டை, நண்பரின் அடையாள அட்டையை சோதித்து விட்டு “இருட்டில் என்ன வேலை உங்களுக்கு” என, காவலர் கேட்டார். என் கண்ணியத்தை குலைக்கும் வகையில் அந்த காவலர் செயல்பட்டார். நாங்கள் சட்டத்தை மீறி எதுவும் செய்யவில்லை. காவலர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே புகார் அளித்து உள்ளேன்.
புகார் ஒன்றை சைபர் கிரைமில் அளித்து உள்ளேன். சமூக வலைதளங்களில் எனது பக்கத்தில் இருந்த வீடியோ எடுத்து ஷேர் செய்து ஆபாசமான கருத்துக்களை பதிவுகளை சிலர் செய்து வருகின்றனர். இதுவும், பாலியல் தொல்லை அளிப்பது தான். அதிக மிரட்டல்கள் வருகிறது. அனைவரது பதிவுகளையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து புகார் கொடுத்து உள்ளேன். நான் நேர்மையாக செயல்படுகிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை.
என்னை போன்று, பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியே வாருங்கள். புகார் கொடுங்கள். என் பாதுகாப்பாக அந்த காவலர் ராஜ்குமார் அந்த கேள்வியை கேட்கவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்களை காவல் துறை ஒழுங்காக விசாரிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு வழங்கி வருகிறேன். மாரல் போலீசிங் பண்ண கூடாது. சமூக வலைதளத்தில் பெண்ணை ஆபாசமாக பேசுபவர்களே ரேப்பிஸ்ட் தான்” என்று, அவர் காட்டமாக பேசினார்.
குறிப்பாக, “இவங்க தான் மெரீனா பீச் உத்தமி, பத்திமி என்று சிலர் பேசி வருகிறார்கள். இப்படி பேசுபவர்கள் ஆணாதிக்க மன நிலை கொண்டவர்கள். நான் எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழுவேன். சட்டத்திற்குட்பட்டு இருப்பேன்” என்று, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திலகவதி பேசி உள்ளார்.