இன்று மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில், புகழ்பெற்ற ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சியும், நாட்டியஞ்சலியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக இசையமைப்பாளர் இளையராஜா வந்திருந்தார். அப்போது, இளையராஜாவுக்கும், கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் உள்ளிட்டோருக்கும் மேல தாளங்கள் முழங்க கோயில் யானையை அழைத்து வந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோயில்களில் மனிதர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் எந்த மரியாதையும் அளித்து அழைத்து வரக்கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
முதலில், ஆண்டாள் ரங்க மன்னரை தரிசனம் செய்வதற்காக ஜீயர்கள், பட்டர்களுடன் இளையராஜாவும் செல்ல முயன்றுள்ளார். அப்போது அங்கே இருந்தவர்கள் இளையராஜாவை வெளியே நிற்குமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், அர்த்த மண்டப நுழைவாயிலில் இருந்துபடியே இளையராஜா தரிசனம் செய்துள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்ற இளையராஜாவை திட்டமிட்டே தான் வெளியே அனுப்பியதாகவும், இது தீண்டாமையின் உச்சம் என சர்ச்சை வெடித்தது. இந்த நிகழ்வை தொடர்ந்து, கோவில் நிர்வாகத்திற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.