வலிப்பு வந்தது போல் நாடகமாடி வழிப்பறியில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் தப்பிச் செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்லில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
நாமக்கல் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி என்பவரது மகன் 31 வயதான நவீன், அங்குள்ள ஒரு லாரி பட்டறையில் வேலை செய்து வருகிறார். நவீன் வேலை விசயமாக சென்னை சென்ற போது, அங்கு நண்பரான 25 வயது மாரியை நாமக்கல்லில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளார்.
அப்போது, நேற்று நள்ளிரவு நாமக்கல் மோகனூர் சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு மாரிக்கு வலிப்பு வந்தது போல் அவர் நடித்து உள்ளனர். அப்போது, சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளியான 31 வயதான பொன்னார், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.
அப்போது, சாலையில் இரு வரையும் பார்த்த பொன்னர், தனது வண்டியை நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வந்து உள்ளார். அப்போது, அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் அவர் கொண்டு சென்ற 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறித்துக்கொண்டு நவீனும், மாரியும் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக தப்பித்துச் சென்று உள்ளனர்.
ஆனால், அங்கிருந்து சிறிது தூரம் சென்றவர்கள் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளனர். இச்சம்பவத்தில், மாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில், நவீன் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நவீனும் தற்போது உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்வம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.